தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட் கடத்தல்: கடப்பிதழின்றி சிங்கப்பூரிலிருந்து வெளியேற முயற்சி

1 mins read
fc258e02-33f4-46ef-b15d-1f35d0e55063
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்குள் 14,000க்கும் அதிகமான மின்சிகரெட்டுகளையும் மின்சிகரெட் பாகங்களையும் கடத்தி வர முயன்ற லாரி ஓட்டுநர் துவாஸ் சோதனைச்சாவடியில் பிடிபட்டிருக்கிறார்.

மலேசியரான அந்த லாரி ஓட்டுநரின் கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று நாள்களுக்குப் பிறகு அவர் வேறு ஒரு லாரியின் சரக்கு வைக்கும் பகுதியில் ஒளிந்துகொண்டு சட்டவிரோதமாக மலேசியா திரும்ப முயற்சி செய்திருக்கிறார்.

எனினும், 32 வயது முகம்மது ஃபக்காருதின் முகம்மது ரோஸ்லியின் முயற்சிகள் சோபிக்கவில்லை. துவாஸ் சோதனைச்சாவடியில் அவரைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் மீண்டும் பிடித்தனர்.

திங்கட்கிழமை (நவம்பர் 3) அந்த ஆடவருக்கு 27 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடப்பிதழின்றி சிங்கப்பூரிலிருந்து வெளியேற முயன்றதாகவும் மின்சிகரெட் பொருள்களைக் கடத்தியதாகவும் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பளிக்கும்போது மின்சிகரெட்டுகளைக் கடத்தி வந்ததாக மூன்றாவது குற்றச்சாட்டும் கருத்தில்கொள்ளப்பட்டது. மொத்தமாக, ஃபக்காருதின் 4,780 மின்சிகரெட்டுகளையும் 9,690 மின்சிகரெட் பொருள்களையும் கடத்தி வர முயன்றிருக்கிறார்.

அவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார் என்றும் பலரிடமிருந்து கடன் பெற்றதைத் தொடர்ந்து நிதிச் சவால்களை எதிர்நோக்கி வந்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்