அமெரிக்கா அதன் வர்த்தகப் பங்காளிகள் மீது வரிவிதித்திருப்பதைத் தொடர்ந்து இறுதியில் என்ன நடக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் தெரிந்துகொள்ள காலம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதன் வர்த்தகப் பங்காளிகளுடன் பலமுறை இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த எண்ணம் கொண்டுள்ளது என்றும் அதற்குக் காலம் ஆகும் என்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சனிக்கிழமை (ஜூன் 7) கூறினார்.
வர்த்தகம், முதலீடு, அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, விநியோகச் சங்கலி ஆகியவையே அமெரிக்கர்களுக்கு ஆக முக்கியமான விவகாரங்களாக இருக்கின்றன என்பது அந்நாட்டின் குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர் இரு தரப்பினரிடையேயும் உள்ள ஒருமித்த கருத்து என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.
அமெரிக்க செனட்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் தாம் கலந்துகொண்ட சந்திப்புகளில் அது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.
வாஷிங்டனுக்குத் தாம் மேற்கொண்ட ஐந்து நாள் அதிகாரத்துவப் பயணத்தை நிறைவுசெய்யும் நிகழ்வாக டாக்டர் பாலகிருஷ்ணன் ஸூம் தளம்வழி சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமது பயணத்தின்போது இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான வலுவான, நிலையான இருதரப்பு உறவை மறுவுறுதிப்படுத்திக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
டாக்டர் பாலகிருஷ்ணன், கடந்த புதன்கிழமை (ஜூன் 4) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ருபியோவைச் சந்தித்தார். அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து திரு ருபியோவிடம் பேசியதாகவும் அவர் சொன்னார்.
அதனையடுத்து அமெரிக்காவின் அந்நடவடிக்கை, சிங்கப்பூரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது அல்ல என்று உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வரிவிதிப்பு தொடர்பில் பேசிய டாக்டர் பாலகிருஷ்ணன், “நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தையின் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்,” என்றார்.
தமது பயணத்தின்போது அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்புகொள்வதில் ஏதேனும் சவால்கள் இருந்தனவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அவர், அமெரிக்கர்களைத் தொடர்புகொள்வதில் எந்த இடையூறும் இருக்கவில்லை என்று விவரித்தார்.
மே மாதத்தில், துணைப் பிரதமர் கான் கிம் யோங், அமெரிக்காவிற்கு பகுதி மின்கடத்திகள் தொடர்ந்து வழங்கப்படுவதை சிங்கப்பூர் எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்பது குறித்து விவாதிக்க வாஷிங்டன் ஆவலாக இருப்பதற்குரிய ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாகவும், சிங்கப்பூரின் மருந்து ஏற்றுமதிகளில் முன்னுரிமை அல்லது பூஜ்ஜிய அமெரிக்க வரிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
நிலையற்ற உலக வர்த்தகச் சூழலால் சிங்கப்பூரின் உற்பத்தி கடந்த மே மாதம் தொடர்ந்து இரண்டாவது மாதமாகச் சுருங்கியது என்று ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட கொள்முதல் மேலாளர்களின் குறியீட்டு புள்ளிவிவரங்கள் காட்டின.

