உணவுப் பொருள்கள்மீதான வரிகளை மீட்டுக்கொள்ளும் அமெரிக்கா

2 mins read
0aadf2dc-d147-4959-96c4-926986669041
அமெரிக்கர்கள் அதிகம் உண்ணும் பெரும்பாலான உணவுப் பொருள்களின் விலைகள் கணிசமாக உயர்ந்தன. - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மாட்டிறைச்சி, தக்காளி, வாழைப்பழம் ஆகிய சில உணவுப்பொருள்கள்மீதான வரிகளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) மீட்டுக்கொண்டுள்ளார்.

பலசரக்குப் பொருள்களின் விலை அதிகரித்திருப்பதால் சினமடைந்த அமெரிக்கர்களை முன்னிட்டு திரு டிரம்ப் அதை அறிவித்தார்.

திரு டிரம்ப் அனைத்து நாடுகளின் இறக்குமதிமீதும் குறைந்தது பத்து விழுக்காட்டு வரி விதித்ததை அடுத்து உலக அளவில் விலைவாசி அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அதிகரித்துள்ள பலசரக்கு விலைகள் குறித்து பயனீட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வரி மூலம் ஏற்படும் சுமையைப் பல நிறுவனங்கள் பொருள்களின் கட்டணங்களில் வெளிப்படுத்துவதால் 2026ஆம் ஆண்டு விலைவாசி மேலும் உயரக்கூடும் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

நவம்பர் 14ஆம் தேதி திரு டிரம்ப் அர்ஜெண்டினா, எக்குவடோர், குவாட்டமாலா, எல் சல்வடோர் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தக் கட்டமைப்புகளை அறிவித்தார்.

அதன் மூலம் குறிப்பிட்ட அந்த நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவுப் பொருள்கள்மீதான வரிகள் நீக்கப்படும்.

அந்த உடன்பாட்டில் அமெரிக்கர்கள் அதிகம் உண்ணும் உணவுப் பொருள்கள் அடங்கும். அவற்றில் பெரும்பாலான பொருள்களின் விலைகள் கணிசமாக உயர்ந்தன.

கொத்திய இறைச்சியின் விலை செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 13 விழுக்காடு கூடியது. கடைகளில் விற்கப்படும் இறைச்சி உணவின் விலை ஓராண்டுக்கு முன் இருந்ததைவிட இப்போது 17 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வாழைப்பழத்தின் விலை 7 விழுக்காடு அதிகரித்தது. தக்காளி விலை 1 விழுக்காடு கூடியது. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளில் அடிக்கடி உண்ணும் உணவின் விலைகள் செப்டம்பர் மாதத்தில் 2.7 விழுக்காடு அதிகரித்தது.

இந்நிலையில், திரு டிரம்ப் அறிவித்த வரிவிலக்கைப் பல நிறுவனங்கள் வரவேற்றன. வேறு சில நிறுவனங்கள் அவற்றின் பொருள்கள் வரிவிலக்குப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தன.

வரிகளில் கூடுதல் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற கேள்விக்குத் திரு டிரம்ப் இப்போதைக்கு அதற்கு அவசியமில்லை என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்