சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதராகப் பொறுப்பேற்க அஞ்சனி சின்ஹா தயார்

2 mins read
2d1009c4-5d22-475b-87a3-41067973e8bc
சிங்கப்பூருக்கான புதிய அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் டாக்டர் அஞ்சனி சின்ஹா. - படம்: அமெரிக்கத் தூதரகம், சிங்கப்பூர் இணையத் தளம்

சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதர் டாக்டர் அஞ்சனி கே சின்ஹா ​​தனது பதவிக் காலத்தைத் தொடங்க சிங்கப்பூர் வந்தடைந்துள்ளதாக சிங்கப்பூரிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வியாழக்கிழமை (நவம்பர் 6) தெரிவித்துள்ளது.

“அமெரிக்க வர்த்தகத்திற்கான முன்னணி மையமாகவும், வட்டார நிலைத்தன்மையின் தூணாகவும் இருக்கும் அமெரிக்காவின் நண்பரான சிங்கப்பூரில், அமெரிக்காவைப் பிரதிநிதிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று டாக்டர் சின்ஹா ​​கூறினார்.

ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூர் அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் தாம் எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

“பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில் சிங்கப்பூருடனான ஒத்துழைப்புக்கான நமது லட்சியங்களை அதிகரிக்குமாறு அதிபர் டிரம்ப் என்னிடம் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு போன்ற துறைகளில் சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வமாக உள்ளேன்,” என்றும் டாக்டர் சின்ஹா தெரிவித்தார்.

அக்டோபரில் அமெரிக்க செனட்டால் உறுதிப்படுத்தப்பட்ட டாக்டர் சின்ஹா, ஓர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்.

அவரும் அவரது மனைவியான ஓய்வுபெற்ற மயக்க மருந்து நிபுணர் கிகி சின்ஹாவும் திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர்.

செழிப்பு மற்றும் பாதுகாப்பு என்ற ஒன்றுபட்ட இலக்குகளில் சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை டாக்டர் சின்ஹாவின் நியமனம் பிரதிபலிக்கிறது என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

“கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக, அமெரிக்காவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பங்காளித்துவம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம், எரிசக்தி பாதுகாப்பு, சட்ட அமலாக்கம், ராணுவ ஈடுபாடுகள் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு மக்களுக்கும் உறுதியான நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது,” என்று அமெரிக்கத் தூதரகம் மேலும் கூறியது.

“ஒரு மருத்துவராக, நான் எனது வாழ்க்கையை மக்களுடன் தொடர்புகொள்வதிலும், முடிவுகளை வழங்குவதிலும் செலவிட்டுள்ளேன். மேலும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த அதே ஒத்துழைப்பு உணர்வைப் பயன்படுத்துவதை எதிர்நோக்குகிறேன்,” என்றும் டாக்டர் சின்ஹா ​​கூறினார்.

குறிப்புச் சொற்கள்