அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘வொர்காடோ’ சிங்கப்பூரில் அதன் ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே அந்நிறுவனம் அமைத்துள்ள முதல் ஆய்வகம் இதுவாகும்.
இந்த நடவடிக்கையின்படி, ஏற்கெனவே உள்ள 170 ஊழியர்களுடன் மேலும் 65 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உள்ளூர் பங்காளிகளுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த நடைமுறைகளுக்கு ஏற்ற தீர்வுகளை செயல்படுத்துவது அதன் இலக்காகும்.
சிங்கப்பூரின் உயர்கல்விக் கழகங்களுடன் கூட்டமைத்து செயற்கை நுண்ணறிவுத் திறனாளர்களை உருவாக்குவதும் வொர்காடோவின் திட்டம்.
சுதந்திரமாக செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு முகவர்களை மேம்படுத்த புதிய 65 திறன் வாய்ந்த வொர்காடோ ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர். அடுத்த சில ஆண்டுகளில் இணையவுள்ள புதிய திறனாளர்களில் செயற்கை நுண்ணறிவுப் பொறியாளர்கள், மேம்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
ஆரம்பக்கட்டமாக நிதி, தளவாடம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்காளி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
அமெரிக்காவின் ‘சிலிகான் வேலி’ என்ற இடத்தில் அதன் தலைமையகம் அமைந்துள்ளது. உலகில் 15 அலுவலகங்கள் வொர்காடோவுக்கு இருக்கின்றன.
சிங்கப்பூரில் ஆய்வகத்துடன் அதன் துணை தலைமையகம் சன்டெக் சிட்டியிலும் மற்றொரு ஆய்வகம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் நவம்பர் 1ஆம் தேதிமுதல் இயங்கி வருகின்றன.
தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் அங்கமான சிங்கப்பூர் மின்னிலக்க தொழில்துறை (Digital Industry Singapore) வழங்கிய மானியம் இந்த ஆய்வகத்தின் உருவாக்கத்திற்கு துணை புரிந்துள்ளது. புத்தாக்கமான மின்னிலக்க தொழில்துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரசாங்கத்தின் இந்த அமைப்பு துணை நிற்கிறது. மானியத்தின் மதிப்பு பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சன்டெக் சிட்டியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நடந்த அதிகாரபூர்வ திறப்புவிழாவில் கலந்துகொண்டு தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பேசினார்.
“செயற்கை நுண்ணறிவு முகவர்கள் வேலை நேரத்தை மிச்சப்படுத்தி, துல்லியத் தன்மையை மேம்படுத்தி பண விரயத்தைக் குறைக்க உதவுகின்றனர்” என்று கூறினார்.
நடைமுறைக்கேற்ற அணுகுமுறைகளின் வழியாக முகவர்களின் திறனை புதிய வகையில் சோதிக்கும் வொர்காடோவின் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார். முகவர்கள் தவறான செயல்பாடுகளில் ஈடுபடும் அபாயமும் குறைக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் ‘மைக்ரோசாஃப்ட்’, ‘புருடென்ஷியல்’ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிபுணத்துவ செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடங்கள் இயங்கிவருகின்றன.

