உலகின் தற்போதைய குழப்பமான சூழலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் முக்கியமான பங்காற்றுகின்றன என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை (ஜூலை 3) கூறினார்.
தேசிய பல்கலைக்கழகமும் சிங்கப்பூரும் திறனாளர்களின் புகலிடமாக உருவெடுக்க அனைவருடனும், அவர்கள் எங்கிருந்து வருபவர்களாக இருந்தாலும், திறந்த மனப்பான்மையுடன் அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.
புவிசார் அரசியல் பதற்றங்கள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமையை அதிகரிக்க வைத்துள்ளன. தொழில்நுட்பம் இப்பதற்ற நிலை அதிகரிக்க வழிவிட்டுள்ள நிலையில் இந்த ஒன்றிணைவு இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 120 ஆண்டு நிறைவை முன்னிட்டு மரினா பே சேண்ட்சில் வியாழக்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.
மேலும் மேலும் குழுப்பமடைந்துவரும் உலகம் கல்வி, அறிவியல் துறைகளை பாதிக்கும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ மாணவரும் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவருமான டாக்டர் பாலகிருஷ்ணன் சொன்னார்.
இதன் விளைவாக பணவீக்கம் அதிகரிக்கும், சிறிய நாடுகள் பாதிப்படையும் அபாயம் அதிகரிக்கும். அத்துடன், நாடுகளின் முன்னேற்றம் மெதுவடையும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தை அவர் தொட்டிலுக்கும், கோட்டைக்கும், பாய்ச்சு தளத்துக்கும் உவமையாகக் கூறினார்.
பல்கலைக்கழகம் 1905ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து அது தேசிய உணர்வு, தேசிய அடையாளம், தேசிய ஒற்றுமை, சுதந்திரம், விழிப்புணர்வு ஆகியவற்றைத் தாலாட்டும் தொட்டில் என அவர் வர்ணித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய நிலையில், திறனாளர், சிந்தனைப் பெருக்கு ஆகியவற்றுக்கு திறந்துவிடப்படும் கோட்டையாக அது விளங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் திறந்தவெளியாக இருக்க வேண்டும். அதில் நமக்கு சம பங்காக திறனாளர்கள், சிந்தனைப் பெருக்கு ஆகியவற்றுடன் சிங்கப்பூரைக் காக்கும் கோட்டையாக அது அமைய வேண்டும்,” என்று திரு பாலகிருஷ்ணன் தமது உரையில் குறிப்பிட்டார்.