வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் மாணவர்களுக்கு உதவக்கூடிய $7 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை வெளியிட மறுத்துள்ளது.
அந்த நிதி, பள்ளிக்குப் பின்னும் கோடைக்காலத்திலும் இடம்பெறும் திட்டங்களுக்கு உதவுவதோடு ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறது. ஆசிரியர் பயிற்சிகளுக்கும் இதர சேவைகளுக்கும் அந்தக் கல்வி நிதி கைகொடுக்கிறது.
அந்த நிதி ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜூன் 30ஆம் தேதி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் வழி நிதி கிடைக்காது என்று கல்வியமைச்சு அரசாங்கக் கல்வி அமைப்புகளிடம் தெரிவித்தது.
கல்வி நிதி தற்போது மறுஆய்வு செய்யப்படுவதாக மட்டும் தெரிவித்த அமைச்சு வேறு எந்த விளக்கத்தையும் தரவில்லை. நிதி எப்போது கிடைக்கும், கிடைக்குமா, கிடைக்காதா போன்ற விவரங்களையும் குறிப்பிடாமல் அதிபரின் கொள்கையின்படி மக்களின் வரிப் பணம் சரியாகச் செலவிடப்படுவதை உறுதிசெய்ய கடப்பாடு கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
உள்நாட்டுக் கொள்கை மசோதாவில் குறைக்கப்பட்ட மில்லியன்கணக்கான நிதிக்கும் கல்வி அமைப்புகளுக்குத் தராமல் முடக்கப்பட்ட நிதிக்கும் சம்பந்தமில்லை.
கல்வியமைச்சின் முடிவைப் பல தரப்பினர் சாடினர்.
பள்ளிக்குப் பின் நடைபெறும் திட்டங்களுக்கும் கோடைக்காலப் பள்ளித் திட்டங்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்படும் $1.3 பில்லியன் டாலர் நிதி ஏறக்குறைய 1.4 மில்லியன் மாணவர்களுக்கு ஆதரவளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
கல்வியமைச்சின் செயலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படக்கூடும். அது சட்டவிரோத நடவடிக்கை என்று ஜனநாயகக் கட்சியினரும் ஆசிரியர் தொழிற்சங்கங்களும் குறைகூறின.
அந்த நிதி நாடாளுமன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்றும் மார்ச் மாதத்தில் முன்வைக்கப்பட்ட விரிவான நிதி மசோதாவில் கல்வி நிதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.