நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் பிற்பகல் நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாக வானிலை நிலையம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) தெரிவித்தது.
சில நாள்களில் மாலை வேளையிலும் சில நாள்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனீசியாவின் சுமத்ரா தீவிலிருந்து வீசும் பலத்த காற்றின் காரணமாக ஓரிரு நாள்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பரின் முதல் இரு வாரங்களில் பெய்யவிருக்கும் மழையின் ஒட்டுமொத்த அளவு தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியாகப் பதிவாவதைவிடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினந்தோறும் பதிவாகும் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாள்களில் 33லிருந்து 34 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியையும் தொடக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

