நான்கில் ஒரு சிங்கப்பூர்வாசியால் வன்போலி காணொளிக்கும் உண்மையான காணொளிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று பெரும்பாலானோர் நம்பிக்கை தெரிவித்தும் இந்நிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆணையம் நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று. ஆய்வின் கண்டுபிடிப்புகள் புதன்கிழமை (ஜூலை 2) வெளியிடப்பட்டன.
வன்போலி உள்ளடக்கம் தொடர்பான கேள்விகள் முதன்முறையாக 2024ஆம் ஆண்டுக்கான இணையப் பாதுகாப்புப் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
வன்போலி உள்ளடக்கத்தை உருவாக்க, பல செயற்கை நுண்ணறிவுச் சாதனங்கள் எளிதில் கிடைக்கும் இக்காலகட்டத்தில் ஆய்வில் இதுகுறித்து முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
வன்போலி உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி போலி உள்ளடக்கத்தை எளிதில் உருவாக்கி மோசடிக் குற்றங்கள் புரியப்படுகின்றன.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 1,050 பேர் பங்கெடுத்தனர். ஆய்வில் பங்கெடுத்தவர்கள் 15 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள்.
இணையப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள், கைப்பேசிப் பாதுகாப்பு போன்றவை தொடர்பாக அவர்கள் கொண்டுள்ள மனப்போக்கை அறிந்துகொள்ள கேள்விகள் எழுப்பப்பட்டன.
வன்போலி உள்ளடக்கத்தை எளிதில் அடையாளம் காணும் ஆற்றல் இருப்பதாக ஆய்வில் பங்கெடுத்தவர்களில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் தெரிவித்தனர். சந்தேகத்துக்குரிய உள்ளடக்கங்கள், காணொளிகளில் காணப்படும் இணை இணையியமற்ற உதட்டசைவுகள் போன்றவற்றை அவர்கள் உதாரணம் காட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அவர்களைச் சோதித்துப் பார்த்தபோது நான்கில் ஒருவருக்கு மட்டுமே வன்போலிக் காணொளிகளுக்கும் உண்மையான காணொளிகளுக்கும் இடையிலான வித்தியாசம் தெரிந்தது என ஆணையம் கூறியது.
“புதிய மோசடி உத்திகளை உருவாக்க இணைய மோசடிக்காரர்கள் தொடர்ந்து திட்டமிட்டு வருகின்றனர். எனவே, விழிப்புடன் இருக்க வேண்டும். மோசடிக் குற்றங்கள் எளிதில் நிகழ்ந்திடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“நம்பகமான தளங்களை நாடி, உள்ளடக்கங்கள் உண்மையானவை என்பதை உறுதி செய்த பிறகே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நமக்குச் சொந்தமான விலைமதிப்பில்லாப் பொருள்களை பாதுகாக்க முடியும்,” என்று ஆணையத்தின் தலைமை நிர்வாகி டேவிட் கோ தெரிவித்தார்.