தங்களின் வங்கிக் கணக்குகளை அடையாளம் தெரியாத நபர்களிடம் தந்த ஆடவர்கள் மூவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
முகம்மது டேனிஷ் அக்கித் அஸ்மான், 21, முகம்மது ரிஸான் அப்துல் மஜீத், 43, தீபன்ராஜ் எம் சிவகுமார், 30, ஆகிய மூவர் மீது திங்கட்கிழமை (நவம்பர் 3) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்கள் ஒப்படைத்த வங்கிக் கணக்குகளை மோசடிக் கும்பல்கள் கள்ளப்பணத்தை நல்லப்பணமாக மாற்றப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பல்வேறு மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 17 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் இந்த மூவரும் அடங்குவர்.
சம்பந்தப்பட்ட மோசடிச் செயல்களில் 1.6 மில்லியன் வெள்ளிக்கும் மேல் பறிபோனது.
கைது செய்யப்பட்ட 17 நபர்கள் 17லிருந்து 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அவர்களில் 14 பேர் ஆண்கள், மூவர் பெண்கள்.
திங்கட்கிழமை குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர்கள் மூவரைத் தவிர கைது செய்யப்பட்ட இதர 14 பேர் மீது செவ்வாய்க்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமைக்குள் (நவம்பர் 4-7) குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து மேற்கொள்ளப்படும் மோசடிகள், முதலீட்டு மோசடிகள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட மோசடிச் செயல்களில் அடங்கும்.

