தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானங்களில் திருட்டு; பின்னணியில் குற்றக் கும்பல்கள்: சிங்கப்பூர் காவல்துறை

2 mins read
69ce80da-4bd5-45d3-8869-f24821757cca
விமானங்களில் இருவர் இருவராக செயல்படும் குற்றக் கும்பல் உறுப்பினர்கள் சந்தேகம் ஏற்படாத வகையில் திருடிவிட்டு விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சிங்கப்பூரைவிட்டு தப்பிச் செல்கின்றனர். - படம்: பிக்சபே கோப்புப் படம்

விமானப் பயணிகளில் அதிகரித்துவரும் சிறு சிறு பொருள்கள் திருடுபோவதன் பின்னணியில் குற்றக் கும்பல்கள் இருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.

இவ்வாறு திருடுபவர்கள் இதற்காகவே நாடுவிட்டு நாடு செல்லும் அதிக தூரமில்லாத பயணங்களை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ஹாங்காங் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் செல்லும் விமானங்களில் 2024ஆம் ஆண்டு முதல் பத்து மாதங்களில் மட்டும் ஹாங்காங் டாலர் 4.32 மில்லியன் பெறுமானமுள்ள பொருள்கள் 169 திருட்டுச் சம்பவங்களில் பறிபோனதாக தெரிவிக்கப்படுகிறது. இது அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 75 விழுக்காடு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இதுபற்றி கருத்துரைத்த விமான நிலைய காவல்துறை பிரிவின் உதவி ஆணையர் எம். மாலதி, விமானத் திருட்டுச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பது, விசாரிப்பது கடினம் என்றார்.

இதில், இருவர் இருவராக செயல்படும் குற்றக் கும்பல் உறுப்பினர்கள் சந்தேகம் ஏற்படாத வகையில் திருடிவிட்டு விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சிங்கப்பூரைவிட்டு தப்பிச் செல்கின்றனர் என்று அவர் விளக்கினார்.

“அவர்கள் ரொக்கம், அத்துடன் சில (பண) அட்டைகளை மட்டுமே எடுத்துச் செல்வர். அவர்கள் உங்கள் பணப்பை மீது கைவைக்கமாட்டார்கள், ஏனென்றால் அப்படிச் செய்தால் அது எளிதில் தெரிந்துவிடும்,” என்று கூறினார் உதவி ஆணையர் மாலதி. திருடர்களை, அவர்கள் நாட்டைவிட்டுச் செல்லுமுன் பிடிப்பதற்கு குறுகிய கால அவகாசமே அதிகாரிகளுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“திருட்டுப் போன உடனேயே அது குறித்து புகார் அளிப்பது முக்கியம். அப்பொழுதுதான் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் அடுத்த விமானப் பயணத்தைத் தொடங்குமுன் பிடிக்க முடியும்,” என்று சொன்னார். அத்துடன், பயணிகள் தங்கள் மதிப்புமிக்க உடைமைகளை தங்களிடமே வைத்துக்கொண்டு எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதன் தொடர்பில் உலகின் 300 விமானச் சேவை நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் விமானங்களில் திருடுபோகும் சம்பவங்கள் கடந்த 12லிருந்து 18 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் அதிகரித்துள்ளதாக ஜூன் 3ஆம் தேதி தெரிவித்தது.

திருட்டுச் சம்பவங்கள் பெரும்பாலும் ஆசிய நாட்டுப் பயணத் தடங்களில் நிகழ்ந்ததாக சங்கம் கூறியது.

குறிப்புச் சொற்கள்