சாங்கி விமான நிலையக் கடையில் திருட்டு; இந்திய நாட்டுப் பெண்கள் இருவர் கைது

1 mins read
665b204b-79e0-4a6c-beea-5f0631837265
சாங்கி விமான நிலைய முனையம் 3ன் பயணிகள் இடைமாற்றப் பகுதியில் திருட்டு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையம் வழியாகப் பயணம் செய்த பெண்கள் இருவர், வெவ்வேறு கடைகளில் பொருள்களைத் திருடியதாகக் கைதுசெய்யப்பட்டனர்.

ஜூன் 2ஆம் தேதி பிற்பகல் 2.25 மணியளவில் முனையம் 3ன் பயணிகள் இடைமாற்றப் பகுதியில் உள்ள ஃபர்லா கடையில் பொருள் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவது குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை திங்கட்கிழமை (ஜூன் 9) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

பணப்பை ஒன்று திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. விமான நிலையக் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கண்காணிப்புக் கருவியின் உதவியுடன் அந்த இரு பெண்களின் அடையாளத்தை உறுதிசெய்து, ஒரு மணி நேரத்திற்குள் அவர்களைக் கண்டுபிடித்தனர்.

இந்திய நாட்டவர்களான அந்த இரு பெண்களும் சிங்கப்பூரிலிருந்து புறப்படுவதற்குள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் 29, 30 வயதுடையவர்கள்.

திருடப்பட்டதாகச் சொல்லப்படும் பணப்பை அந்த 29 வயதுப் பெண்ணிடம் இருந்தது கண்டறியப்பட்டது. திருடப்பட்டதாகக் கூறப்படும் கறுப்பு நிறப் பையும் ஒரு புட்டி வாசனைத் திரவியமும் அந்த 30 வயதுப் பெண்ணின் பயணப்பெட்டியில் இருந்தது கண்டறியப்பட்டது.

நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்