தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல், பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) ஒரு நாள் பயணமாக சிங்கப்பூர் வருகிறார்.
2025 செப்டம்பரில் பதவியேற்ற பிறகு திரு அனுட்டினின் முதல் அதிகாரபூர்வ வருகை இதுவாகும். சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையே அரசதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 6) தெரிவித்துள்ளது.
தாய்லாந்துப் பிரதமருக்கு வெளியுறவு அமைச்சில், பிரதமர் வோங் ஒரு சடங்குபூர்வ வரவேற்பை வழங்குவார். அதைத் தொடர்ந்து இருதரப்பு சந்திப்பு நடைபெறும்.
இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளும் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு ஆகிய துறைகளில் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகலில், பிரதமர் வோங் வழங்கும் அதிகாரபூர்வ மதிய விருந்தில் திரு அனுட்டின் கலந்துகொள்வார்.
இந்தப் பயணத்தின்போது தாய்லாந்துப் பிரதமர், அதிபர் தர்மன் சண்முகரத்னத்தைச் சந்தித்துப் பேசுவார். பின்னர், தேசிய ஆர்க்கிட் தோட்டத்தைப் பார்வையிடுவார். அங்கு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒரு புதிய ஆர்க்கிட் கலப்பின மலருக்கு அவரது பெயர் சூட்டப்படும். 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 680,000 சிங்கப்பூரர்கள் தாய்லாந்திற்குப் பயணம் மேற்கொண்டனர். மேலும் 2023ஆம் ஆண்டில் தாய்லாந்திலிருந்து சுமார் 450,000 பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர்.
இரு நாடுகளும் பொருளியல், பாதுகாப்பு போன்ற துறைகளிலும் கரிம புள்ளிகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட மின்னிலக்கப் பொருளியல் மற்றும் நிலைத்தன்மை போன்ற வளர்ந்து வரும் துறைகளிலும் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன.

