கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளிடமும் வளர்சிதை மாற்றத்தையும் பரம்பரை நோய்களையும் முன்கூட்டியே கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிறந்த குழந்தைகளுக்கான விரிவுபடுத்தப்பட்ட தேசிய (நென்ஸ்) திட்டத்தின்கீழ் அந்தப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே சுகாதாரப் பிரச்சினைகளை அந்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடிகிறது.
சட்டபூர்வமாகக் கட்டாயமில்லாத பரிசோதனையில் குழந்தை பிறந்தவுடன் 24 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்துக்குள் அதன் குதிகாலிலிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.
2006ஆம் ஆண்டு தொடங்கிய திட்டத்தின் மூலம் பல்வேறு வளர்சிதை மாற்றங்களும் பரம்பரை நோய்களும் குழந்தைகளிடம் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றுள் ஃபினைல்கெட்டொனுரியா (Phenylketonuria) வகை நோயும் ஒன்று.
குழந்தைகளிடம் ஒருவகை துர்நாற்றத்தை ஏற்படுத்தி வெளிர் தோற்றத்தில் அவர்களின் தோலை மாற்றக்கூடிய அந்த நோய் கற்றல் குறைபாடு, வலிப்பு, மனநலப் பிரச்சினை ஆகியவற்றுக்கு இட்டுசெல்லக்கூடும்.
மூளை சேதத்தையும் நடமாட்டத்தில் சிரமத்தையும் ஏற்படுத்தக்கூடிய முதல் ரக குலுடெரிக் அசிடிமியா (Type 1 Glutaric Acidemia), மேப்பல் சிரப் (Maple Syrup) சிறுநீர் நோய் போன்ற நோய்களும் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
2019ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்ட பரிசோதனைத் திட்டம் இப்போது 40க்கும் அதிகமான நோய்களைப் பிறந்த குழந்தைகளிடம் கண்டறிய உதவுகிறது.
நென்ஸ் திட்டத்தின் மூலம் கடுமையான நோய் எதிர்ப்பு குறைபாடு, சிஸ்டிக் ஃபைபிரோசிஸ் ஆகிய நோய்களையும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடிகிறது.
கடந்த ஆண்டு கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளும் நென்ஸ் திட்டத்தின்கீழ் பரிசோதனை செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் தேசிய அளவில் பரிசோதனை செய்துகொள்ளும் விகிதம் 96 விழுக்காடாக உள்ளது.

