சாலைகளில் தற்காலிக அடையாளத் தகடுகள்

நெடுநாள் சாலைப் பணிகளுக்கு தற்காலிக அடையாளங்கள்

2 mins read
cf5a099f-a98e-4a74-9bbe-5692805b04a5
ரிவர் வேலி சாலையில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பணிகளின்போது தற்காலிக அடையாளத் தகடுகளை ஊழியர்கள் வெளியேற்றுகின்றனர். அவை நிலப்போக்குவரத்து ஆணையம் நடத்திவரும் சோதனைகளின் அங்கமாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல நாள்கள் நடைபெறக்கூடியப் பணிகளால் வாகன ஓட்டுநர்கள் மேடு பள்ளமான சாலைகளில் வாகனங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். அவர்களுக்கு அது தற்காலிகமானது என்பதை அறிவிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் அடையாளத் தகடுகளை அச்சாலைகளில் பொருத்தி சோதனை நடத்திவருகிறது.

நெடுநாள்கள் பூமிக்கடியில் நடக்கும் பொதுப் பயனீட்டுக்கான சாலைப்பணிகளில் போக்குவரத்தை மேம்படுத்தும் ஆணையத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்று. சாலைப் போக்குவரத்தைச் சமாளிக்க காலை 6.30 மணிமுதல் 9.30 மணிவரையிலும் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் ஊழியர்களால் இயந்திரங்களைக் கொண்டு அடையாளக் குறிகளைக் கொண்ட தகடுகள் தற்காலிகமாகப் பொருத்தப்படும்.

அடையாளத் தகடுகளுக்குக் கீழ் பூமிக்கடியில் நடக்கும் பணிகளை மூடியபடி இரும்பிலான பெரிய உலோகத் தட்டுகள் கனரக சாலைப்பணி வாகனங்களால் வைக்கப்பட்டிருக்கும். அவற்றின்மேல் வாகனங்கள் செல்லும்போது, பயணம் சீராக இருக்காது.

அவை தற்காலிகம் என்பதை உணர்த்தவே அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை முக்கோண வடிவில் ஊழியர் பணிசெய்யும் சித்திரத்துடன் காணப்படும். அவை கத்தோலிக்க ஜுனியர் காலேஜ் அருகில் உள்ள கான்சரி லேன், பூமலைக்கு அருகே உள்ள டால்வி ரோடு ஆகிய சாலைகளில் இரண்டு மாதங்கள் பரிசோதிக்கப்பட்டன. அப்பகுதிகளில் நடந்த சாலைப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

போக்குவரத்தின் உச்ச நேரம் அல்லாத நேரங்களில் கூடுதலாக சாலைப் பணிகளை மேற்கொள்ள ஆணையம் பரிசீலனை செய்கிறது. அதுபற்றிய விவரங்கள் 2025ன் இறுதியில் வெளியிடப்படும். பல ஆய்வுகளை நடத்திவந்த நிலப் போக்குவரத்து ஆணையம், தற்பொழுது அடையாளத் தகடுகளை ரிவர் வேலி சாலையில் விரிவுபடுத்தியுள்ளது.

பல குடியிருப்பாளர்கள் இந்த முயற்சி பலனளித்துள்ளதாக உணர்வதை ஆணையத்தின் ஆய்வு குறிப்பிடுகிறது. அவர்கள் அளித்த கருத்துகளை ஏற்று, வாகன ஓட்டுநர்களின் பார்வைக்கு ஏதுவாக அடையாளத் தகடுகளின் அளவு பெரிதாக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்