இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் மதிப்பு குறித்துச் சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் தவறான தகவலளித்த ஆடவருக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தண்டனை விதிக்கப்பட்டது.
சுங்கத் தீர்வை, பொருள், சேவை வரி என $3.5 மில்லியனைச் செலுத்தாமல் ஏய்த்த 32 வயது எரிக் டான் ஸி ஹாவ் எனும் ஆடவருக்கு ஈராண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையுடன் $4,194,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
டான் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக 44 மாதங்கள் சிறைத்தண்டனையை நிறைவேற்ற நேரிடும்.
முன்னதாக, சுங்கத் தீர்வை, பொருள், சேவை வரி ஏய்ப்பு, குற்றச்செயல்கள் மூலம் ஈட்டிய கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, நீதித்துறையின் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவித்தது ஆகியவற்றை டான் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து மேலும் மூவருடன் சேர்ந்து, இறக்குமதியாகும் வாகனங்களின் மதிப்பை அதிகாரிகளிடம் குறைவாகத் தெரிவிக்கும் சதித்திட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.
‘லைட்ஸ்பீடு பெர்ஃபார்மன்ஸ்’ எனும் நிறுவனம் இறக்குமதி செய்த மோட்டார் வாகனங்கள் தொடர்பில் இச்செயலில் அவர்கள் ஈடுபட்டனர்.
சதித்திட்டத்தின்கீழ், ‘லைட்ஸ்பீடு’ நிறுவனம் இறக்குமதி செய்த கார்களை வாங்குவோரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் இடைத்தரகராக ‘ஈகிள் 9 ஆட்டோமோட்டிவ்’ நிறுவன உரிமையாளரான டான் செயல்பட்டார்.
‘லைட்ஸ்பீடு’ நிறுவனம் பின்னர் ‘ஈகிள் 9’ நிறுவனத்தின் பெயரில் குறைவான கொள்முதல் தொகைக்கு ரசீதுகளை வழங்கியது. ‘ஈகிள் 9’ வெளிநாட்டு நிறுவனங்கள் இரண்டிற்கு பணப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய குற்றச்செயல்கள் வாயிலாக, 485 வாகனங்கள் தொடர்பில் ‘லைட்ஸ்பீடு’ நிறுவனம் சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் தவறான தகவல்களைத் தெரிவித்தது. அது, மொத்தம் $3,532,170.48 வரி ஏய்ப்பு செய்தது.
அந்த 485 வாகனங்களில் 190 கார்களுக்குத் தவறான தகவல் தெரிவிப்பதற்கு டானின் ‘ஈகிள் 9’ நிறுவனம் உடந்தையாக இருந்தது.
‘லைட்ஸ்பீடு’ நிறுவன இயக்குநர், 2023ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து சதித்திட்டத்தில் பங்குவகித்த டானும் மற்றவர்களும் இத்திட்டம் தொடர்பான ‘வாட்ஸ்அப்’ தகவல்களை அழித்துவிட்டனர்.
டான், சதித்திட்டத்தில் அவரது பங்கு தொடர்பான ஆதாரங்கள் இருந்த கைப்பேசியை வீசி எறிந்துவிட்டார். அது நீதித்துறையின் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்.
வழக்கில் தொடர்புடைய மேலும் மூவர் மீதான விசாரணை தொடர்கிறது.

