சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (சிமுக) நிறுவனரும் அதன் தலைவருமான டான் செங் போக்கும் அதன் முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் கட்சியின் துணைத் தலைவருமான ஹேசல் புவாவும் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளனர்.
கட்சியின் பொருளாளர் எஸ்.நல்லகருப்பனும் மத்திய செயற்குழுவிலிருந்து விலகியுள்ளதாக கட்சி சனிக்கிழமை (ஜூலை 5) வெளியிட்ட செய்தியறிக்கையில் அறிவித்தது.
முன்பு இரண்டாவது துணைத் தலைவராக இருந்த திரு அபாஸ் கஸ்மானி, டாக்டர் டானுக்குப் பதிலாக தலைவராகப் பொறுப்பேற்பார்.
திரு நல்லகருப்பனுக்குப் பதிலாக திரு ஆண்டனி நியோ பொருளாளராகப் பொறுப்பேற்பார்.
மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறாத வேட்பாளர்களான டாக்டர் டான், திருவாட்டி புவா, திரு நல்லகருப்பன் ஆகியோர் கட்சியின் உறுப்பினர்களாகத் தொடர்வார்கள் என்று சிமுக தெரிவித்துள்ளது.
மத்திய செயற்குழு, மேலும் மூன்று புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. இவர்கள் அனைவரும் பொதுத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள். திரு சானி இஸ்மாயில், திரு லாரன்ஸ் பெக், திருவாட்டி ஸ்டெஃபனி டான் ஆகியோர் அந்த மூவர்.
வழக்கறிஞரான திரு சானி, வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்ட அணியில் இடம்பெற்றிருந்தார். அதே சமயம், சிங்கப்பூர் உற்பத்தித் துறை சம்மேளனத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான திரு பெக், சுவா சூ காங் குழுத்தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.
இல்லத்தரசியும் முன்னாள் வழக்கறிஞருமான திருவாட்டி டான், பைனியர் தனித்தொகுதியில் போட்டியிட்டார். மூவரும் ஆளும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களிடம் தோல்வியுற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய செயற்குழுவில் இந்த மூவரும் குறிப்பிட்ட எந்தப் பதவிகளையும் ஏற்கவில்லை.
மே 3ஆம் தேதி நடந்த தேர்தலுக்குப் பிறகு, தான் தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக டாக்டர் டான் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.