தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
நல்லாசிரியர் விருது 2025

மொழியை நிலைபெறச் செய்வது தமிழாசிரியர்களே: தினே‌ஷ் வாசு தாஸ்

3 mins read
fc5bd060-831d-4c71-8ceb-50378414ae86
நல்லாசிரியர் விருது 2025 நிகழ்வில் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (நடுவில்) உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட ஆசிரியர்கள். - படம்: த.கவி

தமிழ்மொழி ஆழமான மரபு கொண்ட, காலத்தால் அழியாத மொழி என்றும் 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான வல்லமையுடன் அதனை வாழும் மொழியாக நிலைபெறச் செய்ய பணியாற்றும் தமிழாசிரியர்களைச் சிறப்பிப்பது பெருமையானது என்றும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைச் சிறப்பிப்பதில் மகிழ்ச்சி. தமிழ்மொழி வீடுகள், சமூகம், பள்ளி என அனைத்துத் தரப்பிலும் செழித்து வளரும் சூழலை உருவாக்கித் தரும் தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகளுக்குப் பாராட்டுகள். ஆசிரியர்களின் அக்கறையும், அர்ப்பணிப்பும் மேலும் தொடரட்டும்,” என்றும் வாழ்த்தினார் தென்கிழக்கு வட்டார மேயரும், தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு தினேஷ்.

சிங்கப்பூரில் தமிழாசிரியர்களின் மேலான பணியை அங்கீகரிக்கும் நோக்கில் நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. அதனைத் தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து வழங்கி வருகின்றன.

அவ்வகையில், இவ்வாண்டு தொடக்கப் பள்ளிப் பிரிவிற்கான நல்லாசிரியர் விருது ஜெமின் தொடக்கப் பள்ளி ஆசிரியை அ. காயத்ரி, 37, வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி ஆசிரியை நூர்மனிஷா சர்மணி, 43, இருவர்க்கும் வழங்கப்பட்டது.

உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியின் மூத்த ஆசிரியர் இராமசாமி ஸ்டாலின், 47, குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சரத்குமார் கணசேகரன், 31, ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, இவ்வாண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது 49 ஆண்டுகால ஆசிரியப் பணி அனுபவம் கொண்ட ஆசிரியை முனைவர் விஜயராணி கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது.

தமது பணிக்காலத்தில் பல்வேறு மாணவர்கள், இளைய ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய 65 வயது திருவாட்டி விஜயராணி, ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பது குறித்து ஆசிரியர்களுக்குப் போதித்து வந்தார்.

2022ஆம் ஆண்டு குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக மீண்டும் அழைக்கப்பட்ட இவர், தற்போது கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், சமூகத் தலைவர்களாகவுள்ள பலரையும் வழிநடத்தியவர்.

தேசிய கல்விக் கழக சிறந்தப் பயிற்சி ஆசிரியர் விருதை ஈசூன் டவுன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இப்ராஹீம் அஷ்ரப் அலி, 55, வென்றார்.

விழாவில் வரவேற்புறை ஆற்றிய தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர், “எதிர்காலத் தலைமுறையை உருவாக்க அடித்தளமிடுவது ஆசிரியர்கள்தான். மாணவர்கள் வீடுகளைவிடப் பள்ளியிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர்,” என்றார்.

“பள்ளிப் பாடம், புறப்பாட நடவடிக்கைகள், போட்டிகள் என அனைத்துக்கும் ஆசிரியர்கள் துணைநிற்கின்றனர். பாடத்தையும் தாண்டி, மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்களாக இருக்கும் ஆசிரியர்கள் போற்றப்படுகின்றனர். நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி,” என்றும் அவர் தெரிவித்தார்.

“கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இவ்விருதுகள் தமிழாசிரியர்களுக்குக் கிடைக்கும் தேசிய அளவிலான அங்கீகாரம். விருதுகளுக்கு வரும் பரிந்துரைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வருகிறது. இந்தச் சிறப்பான விருதினைப் பெற வேண்டும் எனும் ஊக்கமும் இளம் ஆசிரியர்களுக்கு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. இது மகிழ்ச்சியளிக்கும் ஒன்று,” என்றார் தமிழ் முரசின் இணையாசிரியர் வீ பழனிச்சாமி.

“தாய்மொழி ஆசிரியர்களின் பணி சவால்மிக்கது. தேசிய நீரோட்டத்தில் இருமொழிக் கல்வி முக்கியமானது. அதனை வகுப்பறைகளில் உருவாக்கி, சமூகத்தில் கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர். இது பணி என்பதைத் தாண்டிச் சமூகக் கடப்பாடு. அவர்களைப் பாராட்டுவது சமூகத்தின் கடமை. இவ்விழா அவர்களுக்கு அங்கீகாரமளிக்கிறது. இது மேலும் பலரைத் தமிழாசிரியராக வர ஊக்குவிக்கும் என நம்புகிறேன்,” என்று சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் கூறினார்.

“புத்தாக்கமும் படைப்பாக்கமும் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி ஆர்வமூட்டும் வகையில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. பள்ளித் தலைவர்கள், சக ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் எனப் பல்வேறு தரப்பிலிருந்து 543 பரிந்துரைகள் வந்திருந்தன. அவற்றிலிருந்து நான்கு ஆசிரியர்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்,” என்றார் தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைமைச் செயலாளர் ரிஸ்வானா தஸ்னீம்.

குறிப்புச் சொற்கள்