தப்லா! வார இதழ் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
புதிய இணையப்பக்கம் மூலம் இந்தியச் சமூகத்துடன் வலுவான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அது இலக்கு கொண்டுள்ளது.
இதில் உள்ளூர் இந்தியர்களும் மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களும் அடங்குவர்.
தப்லா!, சிங்கப்பூரில் உள்ள இந்தியச் சமூகத்தினருக்கான ஆங்கில மொழி வார இதழாகும்.
புதுப்பொலிவு பெற்றிருக்கும் தப்லா!வின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (நவம்பர் 19) தோ பாயோ நார்த்தில் உள்ள எஸ்பிஎச் மீடியா செய்தி நிலையத்தில் நடைபெற்றது.
முக்கிய இந்தியச் சங்கங்கள், அமைப்புகள், வர்த்தகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஏறத்தாழ 80 பேர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தமிழ் முரசு நாளிதழின்கீழ் செயல்பட்டு வரும் தப்லா!, அதன் பழைய இணையப்பக்கத்தில் மின்னிதழை மட்டுமே பதிவேற்றம் செய்தது.
இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து நடப்புக்கு வந்துள்ள புதுப்பிக்கப்பட்ட இணையப்பக்கம், புதன்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் இந்தியர்களுக்குச் சேவையாற்றுவதே தப்லா!-வின் பிரதான இலக்கு என்றபோதிலும் அதன் புதுப்பிக்கப்பட்ட இணையப்பக்கமும் சமூக ஊடகப் பக்கங்களும் உலக நாடுகளில் உள்ள மற்றவர்களையும் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தப்லா! ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறினார்.
எதிர்வரும் நாள்களில் தப்லா!வில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“எங்கள் அச்சுப் பிரதி, இணையத் தளங்கள் ஆகியவை மூலம் ஒவ்வொரு வாரமும் 17,000 பேரைச் சென்றடைகிறோம். சமூக ஊடகம் வழி ஏறத்தாழ 5,000 பேருடன் தொடர்பில் உள்ளோம். மின்னிலக்கப் பயணத்தை இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம். எனவே, இந்தப் புள்ளிவிவரங்கள் ஊக்குவிக்கும் வகையில் உள்ளன,” என்று திரு வெங்கடேஷ்வரன் கூறினார்.
அறிமுக விழாவின்போது கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது,
அதில் சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கலந்துகொண்டார்.
இந்தியச் சமூகத்திற்கு தப்லா! முக்கியப் பங்களிக்கிறது என்றார் திரு தினேஷ்.
தமிழர் அல்லாத மற்ற இந்தியர்களையும் அது சென்றடைவதை அவர் சுட்டினார்.
மின்னிலக்க அத்தியாயத்துக்குள் தப்லா! நுழைந்திருப்பதை அவர் வரவேற்றார்.

