சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள கடைகளில் மீன் நீச்சல் பையால் செய்யப்பட்ட தயாரிப்புகளில் அருகிவரும் மீன் இனங்கள் ஆறு கண்டுபிடிக்கப்பட்டதாகப் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்தது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தையும் மலேசியா திரங்காணு பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள் இருவர் இதனைக் கண்டுபிடித்தனர்.
480 மீன் நீச்சல் பைகளை அவர்கள் ஆராய்ந்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. கன்சர்வேஷன் லெட்டர்ஸ் சஞ்சிகையில் அந்த இருவரும் தங்களது ஆய்வை ஜூன் 24ஆம் தேதியன்று பதிப்பித்தனர்.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவலாகச் சாப்பிடப்படும் மீன் நீச்சல் பை, பாரம்பரிய சீன கலாசாரத்தில் செல்வத்தையும் மாண்பையும் குறிக்கிறது.
நீச்சல் பையைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றும் கருதப்படுகிறது. நீச்சல் பைகளைக் கண்டு அவை எந்த இனத்து மீன்களுக்குச் சொந்தமானவை எனப் பார்த்தவுடன் கண்டுபிடிப்பது சிரமம்.
எனவே நீச்சல் பைகளால் செய்யப்படும் தயாரிப்புகளின் சந்தையை நெறிமுறைப்படுத்துவது கடினம் என்று தேசியப் பல்கலைக்கழகத்தின் துணைப்பேராசிரியர் பெஞ்சமின் வேன்வ்ரைட் தெரிவித்தார்.
மீன் நீச்சல் பைகள் பதப்படுத்தப்பட்டு, தட்டையாக்கி, கழுவி சுத்தம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மரபணு முறையாலன்றி, அவை எந்த இனங்களைச் சேர்ந்தவை என்பதை உறுதியாகக் கூற முடியாது. எனவே, தென்கிழக்காசியாவில் நடைபெறும் இந்த வர்த்தகத்துடன் எந்த வகையான மீன் இனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்பது இதுவரை எங்களுக்குத் தெரியாது, என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் நீச்சல் பைகளுடன் சுறாத் துடுப்புகள், இறால் ஆகியவை காய்ந்த மீன் உணவுப் பொருள்களாக விற்கப்படுவது இந்நிலையை மேலும் சிக்கலாக்குவதாக அவர் கூறினார்.
துணைப்பேராசிரியர் வேன்வ்ரைட்டும் மலேசியாவின் டாக்டர் சியா யிங் கியெட்டும் மீன் நீச்சல் பைகளை மலேசியக் கடைகளிலிருந்து வாங்கிச் சேகரித்தனர். 2023 அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலகட்டத்திலும் 2024 ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலகட்டத்திலும் அந்தப் பணிகள் நடந்தன.
சிங்கப்பூரில், விக்டோரியா மொத்த விற்பனை நிலையத்திற்கும் ஆர்பர்ட் நிலையத்திற்கும் அவர்கள் சென்று மீன் பைகளைச் சேகரித்தனர்.
மலேசியாவிலிருந்து 118 மாதிரிகளுக்கும் சிங்கப்பூரிலிருந்து 362 மாதிரிகளுக்கும் மரபணு ஆய்வு வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. இரண்டு நாடுகளிலுமே மொத்தம் 39 மீன்கள் அடையாளம் காணப்பட்டன.