மோசடிக் கும்பலுடன் தொடர்பு எனச் சந்தேகம்; நிறுவன இயக்குநர் பதவி விலகல்

2 mins read
853792c9-35f8-400e-a677-8bdce0c05ed4
கம்போடியாவின் ஆகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான பிரின்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் நிறுவனரான 37 வயது சென் சியுடன் திருவாட்டி கெரன் சென் சியூலிங்கிற்கும் மற்ற இரண்டு சிங்கப்பூரர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று புதன்கிழமையன்று (அக்டோபர் 15) த பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. - படம்: ஏஎஃப்பி

கம்போடிய மோசடிக் கும்பலின் தலைவர் என்று கூறப்படும் அந்த நாட்டு வர்த்தகருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெறும் 17லைஃப் குரூப் நிறுவனத்தின் இயக்குநர் பதவி விலகியுள்ளார்.

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று சிங்கப்பூரர்களில் திருவாட்டி கெரன் சென் சியூலிங்கும் ஒருவர்.

அந்தத் தடைப் பட்டியலில் சிங்கப்பூரில் பதிவான 17 நிறுவனங்களும் இடம்பெறுகின்றன.

திருவாட்டி சென் புதன்கிழமையன்று (அக்டோபர் 15) தாமாகவே பதவி விலகினார்.

17லைஃப் குரூப் நிறுவனம் தைவானைச் சேர்ந்தது.

தடைப் பட்டியலில் இடம்பெறுவோருடன் வர்த்தகம் செய்ய அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்பட்டியலை அமெரிக்க அரசாங்கம் நிர்வகித்து வருகிறது.

பொருளியல், வர்த்தகத் தடைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் துறை தடைப் பட்டியலுக்குப் பொறுப்பு வகிக்கிறது.

கம்போடியாவின் ஆகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான பிரின்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் நிறுவனரான 37 வயது சென் சியுடன் திருவாட்டி சென்னுக்கும் மற்ற இரண்டு சிங்கப்பூரர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று புதன்கிழமையன்று (அக்டோபர் 15) த பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

மோசடிக் குற்றங்கள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது போன்றவற்றில் சென் சி ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, பிறரை அவர்களது விருப்பத்துக்கு மாறாக, பலவந்தப்படுத்தி வேலை செய்ய வைப்பதும் இதுதொடர்பான மோசடி வளாகங்களை கம்போடியா முழுவதும் நடத்தியதாகவும் அமெரிக்க, பிரிட்டிஷ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 14) அதிகாரபூர்வமாகக் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே, சென் சியுடன் வர்த்தகம் செய்ததில்லை என்று திருவாட்டி சென் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்