விலங்கியல் பாதுகாப்புக்கென இங்கு செயல்படும் ‘ஹெர்பெட்டாலஜிகல் சொசைட்டி ஆஃப் சிங்கப்பூர்’ (Herpetological Society of Singapore) எனும் தொண்டூழிய சங்கம், குடிமக்களிடையே சுற்றுச்சூழல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஆண்டுதோறும் நிதியளிக்க, ஜனவரி 2026 க்குள் $2,000க்கான மானியத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.
“ஹெர்பெட்டோலஜி” (Herpetology) என்பது, பாம்பு, பல்லி, முதலை போன்ற ஊர்வன மற்றும் தவளை, தேரைகள் போன்ற நீரிலும் நிலத்திலும் வாழ்வன ஆகியவற்றின் உடலியல், சுற்றுச்சூழல், இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் விலங்கியலின் ஒரு பிரிவாகும்.
ஹெச்எஸ்எஸ் ((HSS) என்று அழைக்கப்படும் அந்தச் சங்கத்தின் தலைவர் திரு கண்ணன் ராஜா, 34, நீர்நில வாழ்வன, ஊர்வன ஆகிய இருவகை விலங்கினங்களின் மீது ஆர்வம் கொண்டுள்ளோரின் சிறிய வகை ஆய்வுகளுக்கு இந்த மானியம் ஆதரவளிக்கும் என்று கூறினார். குடிமக்கள் மேற்கொள்ளும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, அறிவியல் ஆகிய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் இந்த மானியத்தை 2026 ஜனவரி மாதத்துக்குள் வழங்கிட சங்கம் திட்டமிடுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
விலங்கியலில் பல்லுயிர்களுக்காக பெரிய அளவில் நடைபெறும் ஆய்வுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளுக்கு தகுதிபெறாதவர்கள் இந்த சிறிய மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சிங்கப்பூர் தேசிய கல்விக்கழகத்தின் திரு கண்ணன் விளக்கினார்.
உள்ளூர் கல்விக் கழகங்களில் பயிலும் இளங்கலை மற்றும் முதுநிலை மாணவர்கள் $1,000 வரையிலான மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சிங்கப்பூரில் 166 வகையான ஊர்வன மற்றும் நிலம் நீர் வாழ் விலங்கினங்கள் உள்ளன. அவற்றில் 17 வகை விலங்கினங்கள் வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய கல்விக் கழக லீ கொங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் அக்டோபர் 4 (சனிக்கிழமை) நடந்த சங்கத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு முன்பாக திரு கண்ணன் மானியத்திட்டத்தைப் பற்றி உரையாற்றினர்.

