உயர்ந்துவரும் கடல்மட்டம் சிங்கப்பூரின் எட்டுத் தீவுகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து, அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பரிந்துரைப்பர்.
புலாவ் தெக்கோங், கூசு தீவு, சிஸ்டர்ஸ் தீவுகள், புலாவ் புக்கோம், புலாவ் ஹந்து, புலாவ் பவாய், புலாவ் சின்னாங் ஆகியனவும் செயின்ட் ஜான்ஸ், லாசரஸ் தீவுகளை உள்ளடக்கிய தென்தீவுகளுமே அந்த எட்டுத் தீவுகள்.
அடுத்த ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஈராண்டு ஆய்விற்கான ஒப்பந்தப்புள்ளியை தேசிய நீர் முகவை (பியுபி) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
கள ஆய்வுகள் மூலம் தரவுகள் திரட்டப்படும். வெள்ள அபாய மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு, வெள்ளப் பாதுகாப்பு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படும்.
அந்த எட்டுத் தீவுகளைப் பாதுகாப்பதற்கான சாத்தியமுள்ள தீர்வுகள் குறித்து ஆராயப்படும் என்றும் அத்தீர்வுகளை உருவாக்குவதற்கான கால அளவு வகுக்கப்பட்டு, பின்னர் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பியுபி ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.
ராணுவப் பயன்பாடு, கடல்சார் ஆய்வு, மரபுடைமை, கேளிக்கை, பாறைவேதியியல் (பெட்ரோகெமிக்கல்) பணிகள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அத்தீவுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தீவுகளில் புலாவ் தெக்கோங் மட்டும் சிங்கப்பூருக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. மற்ற அனைத்தும் சிங்கப்பூர் நீரிணையின் தென்பகுதியில் அமைந்துள்ளன.
கடந்த 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மூன்றாவது தேசிய பருவநிலை மாற்ற ஆய்வறிக்கையின்படி, வரும் 2100ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் கடல்மட்டம் சராசரியாக 1.5 மீட்டர் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிலம் மூழ்குதல், புயல், அன்றாட அலைசார் செயல்பாடு போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது அது நான்கு அல்லது ஐந்து மீட்டர்வரை உயரக்கூடும்.
கடல்மட்ட உயர்வானது பவளப்பாறைகள், சதுப்புநிலக் காடுகள், கடலடிப் புல்வெளிகள் போன்ற ஆழமற்ற வாழ்விடப் பகுதிகளை மூழ்கடித்துவிடலாம் என்று கடல்சார் உயிரியலாளரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தின் துணைத் தலைவருமான ஹுவாங் டேன்வெய் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வரும் 2026ஆம் ஆண்டில் தொடங்கவுள்ள ஆய்வானது, அந்த எட்டுத் தீவுகள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமையும் என்று பியுபி தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் மொத்தம் 63 கடல்தீவுகளும் சிறுதீவுகளும் உள்ளன.