தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி செய்து பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்: என்யுஎஸ்

2 mins read
66ef5db1-cd12-455d-b4dc-6486abd19e81
உத்தரவாதம் அளிக்கப்பட்ட சேர்க்கை, நேரடி அல்லது விரைவான சேர்க்கைக்கான வழிமுறை என எதுவும் இல்லை என சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது. - கோப்புப் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் இரு தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு முதுகலைப் பட்டப்படிப்பு சேர்க்கையில் உதவுவதாகச் சீன சமூக ஊடகங்களில் சில வெளிநாட்டுக் கல்விச் சேவை வழங்கும் நிறுவனங்கள் விளம்பரம் வெளியிட்டுள்ளன.

குறைந்த ஜிபிஏ (GPA) மதிப்பெண் குறியீடு பெற்ற மாணவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இம்மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மாணவர்களை அப்பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாகச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) தமது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலைக்கழகங்களைத் தவறாக வழிநடத்த, மாணவர்களின் கல்வித் தகுதியையும் பிற ஆவணங்களையும் போலியாகத் தயாரித்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது போன்ற மோசடிகளில் அந்நிறுவனங்கள் ஈடுபடக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் பூர்த்திசெய்ய வேண்டும் என்றும் அனைத்து விண்ணப்பங்களும் தகுதியின் அடிப்படையில்தான் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அது கூறியுள்ளது.

“உத்தரவாதம் அளிக்கப்பட்ட சேர்க்கை, நேரடி அல்லது விரைவான சேர்க்கைக்கான வழிமுறை என எதுவும் இல்லை. தகுதிக்கே முக்கியத்துவம்,” என அது வலியுறுத்தியுள்ளது.

‘ஜாங்ஷெங் இன்டர்நேஷனல்’, ‘ஃபிளையிங் கேரியர்’ போன்ற சில நிறுவனங்கள் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்கள் உட்பட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்குக் கட்டணச் சேவை வழங்குவதாகச் ‘சியோஹொங்சு’ எனும் சீன சமூக ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, ஜாங்ஷெங் தமது இணையப் பக்கத்தில், 2017ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் அந்நிறுவனம், ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களை நேரடி சேர்க்கை மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் சேர்க்க அவற்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு உதவுவதாகவும் அது விளம்பரம் வெளியிட்டுள்ளது.

மோசடி வழிகளில் சேர்க்கை பெற்றதாகக் கண்டறியப்படும் மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு அவர்கள் பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேற்றப்படுவர் என்றும் மாணவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் அதன் அமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் என்யுஎஸ் தெரிவித்துள்ளது.

நடத்தை விதிகளை மீறும் மாணவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தல், கல்விச் சேர்க்கையில் நேர்மையின்மை ஆகியவையும் அடங்கும் என்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

போலியான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட சில விண்ணப்பங்களை ஏற்கெனவே நிராகரித்துவிட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்காக எந்தவொரு வெளிநாட்டுக் கல்விச் சேவை வழங்கும் நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றவில்லை என இரு பல்கலைக்கழகங்களும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்