கெத்தே சினிப்ளெக்சஸ் (Cathay Cineplexes ) செலுத்தப்படாத வாடகை குறித்து மேலும் அதிகமான கடிதங்களைப் பெற்றுள்ளது. கெத்தே சினிப்ளெக்சஸ் திரையரங்குகளை நிர்வகிக்கும் எம்எம்2 ஏஷியா (mm2 Asia) நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது. நிறுவனம் அதன் நிர்வாக, தலைமைத்துவக் குழுவில் முக்கிய மாற்றங்களைச் செய்திருப்பதாகவும் தெரிவித்தது.
இதற்கு முன்னர் நிதிச் சவால்களைக் கையாள அனைத்து வழிகளையும் ஆராய்வதாக எம்எம்2ஏஷியா ஜூலை 17ஆம் தேதி கூறியிருந்தது. அனைத்துத் திரையரங்குகளையும் மூடுவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக அப்போது அது சொன்னது.
எம்எம்2ஏஷியாவின் அண்மை அறிவிப்புகளைத் தொடர்ந்து அதன் பங்குவிலை 16.7 விழுக்காடு அதாவது 0.1 காசு குறைந்து 0.5 காசானது.
ஜூலை 28ஆம் தேதி கெத்தே சினிப்ளெக்சஸ் சட்டபூர்வக் கடிதமொன்றைப் பெற்றதாக எம்எம்2 ஏஷியா தெரிவித்தது. ஜெம் (JEM) கடைத்தொகுதியில் திரையரங்கை வாடகைக்கு விட்ட லெண்ட்லீஸ் ரீட்டெய்ல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் அதனைச் சமர்ப்பித்திருந்தது. கெத்தே சினிப்ளெக்சஸ் கொடுக்கவேண்டிய வாடகை உட்பட நிலுவையில் உள்ள மற்றத் தொகைகளும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை $1.98 மில்லியன் வாடகையைத் தரவேண்டும் என்று கடிதம் தெரிவிக்கிறது. எஞ்சிய கடனுக்கு மாதம் ஒரு விழுக்காடு விகிதம் வட்டியும் கேட்டுள்ளது லெண்ட்லீஸ். ஜூலை 25 நிலவரப்படி வட்டித்தொகையின் மதிப்பு $1.66 மில்லியன்.
கெத்தே சினிப்ளெக்சஸ், இ!ஹப்@டௌன்டவுன்ஈஸ்ட்டில் உள்ள அதன் வளாக உரிமையாளரான ரிசோர்ட்ஸ் கோன்செப்ட்டிடமிருந்தும் கடிதமொன்றை ஜூலை 29ஆம் தேதி பெற்றுள்ளது. உரிமக் கட்டணம், சேவைக் கட்டணம், பயனீட்டுக் கட்டணம், வட்டி உட்பட $580,000ஐக் கட்டுமாறு கடிதம் கோருகிறது.
இந்நிலையில் எம்எம்2 ஏஷியா நிறுவனம், அதன் நிர்வாக, தலைமைத்துவத்தில் முக்கிய மாற்றங்களைச் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது. நிறுவனத்திலிருந்து அதிகமானோர் விலகியதும் ஓய்வுபெற்றதும் புதியவர்கள் சேர்ந்ததும் மாற்றங்களுக்குக் காரணம் என்று அது சொன்னது.
எம்எம்2 ஏஷியா நிறுவனத்தின் தலைமைச் சீரமைப்பு அதிகாரியாகத் திரு ஆங் சியாங் மெங் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி பொறுப்பேற்பார். நிறுவன, கடன் சீரமைப்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றவர் அவர்.

