ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழின் 180 ஆண்டு நிறைவு விழாவின் அங்கமாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் , சிங்கப்பூர் புகைப்படச் சங்கத்துடன் இணைந்து புகைப்படக் கண்காட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூர்க் கதைகள், நாட்டின் இதயம் என்ற தலைப்புள்ள இந்தக் கண்காட்சி, சிங்கப்பூரின் வரலாறு, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றைச் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களைக் கொண்டாடுகிறது.
இந்தக் கண்காட்சியில் இடம்பெறும் 250க்கும் அதிகமான படங்கள், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் படச்செய்தியாளர்களால் எடுக்கப்பட்டவை.
சிங்கப்பூரின் அரசியல், சமூக நிகழ்வுகள், சமூக மாற்றங்கள், அன்றாட வாழ்க்கை ஆகியவற்றை ஆவணப்படுத்தும் அரிய படங்களைப் பொதுமக்கள் காணலாம்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியை கலாசார, சமூக, இளையர் துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பித்தார்.
படச்செய்தி தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் படச்செய்தியாளர்கள் நடத்தும் உரைகளுக்குப் பொதுமக்கள் செல்லலாம்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் ஆர்வத்தையும் தேடலையும் தூண்டுவது இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழாசிரியர் ஜேமி ஹோ தெரிவித்தார்.
“ நமது மூத்த தலைமுறையினருக்கு, இந்தப் புகைப்படங்கள் அவர்களின் வாழ்க்கையை வடிவமைத்த தருணங்களை நினைவூட்டும் என்று நம்புகிறோம். இந்தக் கண்காட்சி, நமது வரலாற்றைப் பற்றிய விளக்கத்தை இளையர்களுக்குத் தருவதுடன், ஒரு நாடாக எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம் என்பது பற்றிய புரிதலை மேம்படுத்தும் என விரும்புகிறோம்,” என்று திரு ஹோ கூறினார்.

