குடும்ப வியாபாரமாக 80 ஆண்டுகளுக்குமேல் இயங்கி வந்தது

ஹாலந்து வில்லேஜ் ‘தம்பி’ சஞ்சிகைக் கடை விடைபெறுகிறது

சிங்கப்பூரின் சஞ்சிகை விரும்பிகள் ஆவலுடன் பல்லாண்டுகளாக நாடிவந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்குப் பிறகு தனது செயல்பாடுகளை நிறுத்தவுள்ளது.

வாடகை ஏற்றம், கடைக்கு வெளியே அடுக்குகளில் பாதியளவை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது உள்ளிட்ட சில சிரமங்கள் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்ததாகக் கடை உரிமையாளர் பெரியதம்பி செந்தில்முருகன், 49, தமிழ் முரசிடம் கூறினார்.

ஹாலந்து வில்லேஜின் லோரோங் லிப்புட் சாலையில் இயங்கி வந்த இந்தக் கடை, இறுதி நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 5) இரவு சுமார் 8 மணி வரை செயல்படும்.

‘சேம்’ என்று வாடிக்கையாளர்களால் பிரபலமாக அழைக்கப்படும் திரு செந்தில்முருகன், தம் வாழ்நாள் முழுவதும் சஞ்சிகைகளை விற்றுவந்தவர்.

ஒரு காலகட்டத்தில் சுமார் 7,000 தலைப்புகளில் சஞ்சிகைகளைக் கொண்டுள்ள இந்தக் கடை, புத்தகங்களையும் விற்றது. அப்போதைய காலகட்டத்தில் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணிவரை திரு செந்தில்முருகன் உறக்கமின்றி உழைப்பைக் கொடுத்தவர்.

“இந்தக் கடையைக் குழந்தையைப்போல கட்டிக்காத்தேன்,” என்று அவர் கண்ணீர் மல்கக் கூறினார்.

திரு செந்திலின் தாத்தா பி.கோவிந்தசாமி, முதன்முதலாக இந்தக் கடையைச் செய்தித்தாள் விநியோகச் சேவையாகத் தொடங்கினார். 1950களில் திரு செந்திலின் தந்தை ஜி.பெரியதம்பி அந்தக் கடையில் சஞ்சிகைகளையும் விற்றுவந்தார். அப்போது அவர் சிங்கப்பூரில் வேறெந்தக் கடையிலும் கிடைக்கப்பெறாத வெளிநாட்டு இதழ்களைத் தருவித்து விற்பார்.

தமிழ் முரசு, முன்னைய தமிழ் மலர் ஆகிய சிங்கப்பூர்த் தமிழ் நாளிதழ்கள் மட்டுமின்றி இந்தியாவிலிருந்து ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே ஆகியவற்றுடன் மலேசியாவின் தமிழ் நேசன், மலேசிய நண்பன் ஆகிய பதிப்புகளை ஒரு காலகட்டத்தில் விற்றுவந்தார்.

கடை மூடப்படுவதைப் பற்றிக் கேள்வியுற்ற வாடிக்கையாளர்கள் சிலர், தங்கள் வருத்தத்தைக் கடையினரிடம் தெரிவித்ததைத் தமிழ் முரசு நேரில் கண்டது.

கடை மூடப்படுவது பேரிழப்பு எனக் கூறிய வடிவமைப்பு மாணவர் ராயன் சென், 21, “அச்சு ஊடகங்களை இளையர்கள் முழுமையாக நிராகரிக்கின்றனர் என்ற கருத்திற்கு எனக்கு உடன்பாடு இல்லை,” என்றார்.

ஹாலந்து வில்லேஜ் பகுதியைத் தாண்டி கடை அமைக்க திரு செந்தில் விரும்பவில்லை. தாம் வளர்ந்த ஹாலந்து வில்லேஜிலேயே மறுபடியும் கடை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இங்கு சஞ்சிகைக் கடையைத் திறக்க விரும்புவதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!