இரவுநேர பொழுதுபோக்கு வட்டாரங்களில் தொடரும் மின்சிகரெட் பழக்கம்

2 mins read
e7b26f99-efc2-457e-926a-3423e065539f
ஆகஸ்ட் 23ஆம்தேதி ஸூக் (Zouk) உல்லாசக்கூட புகைபிடிப்புப் பகுதியில் மின்சிகரெட்டுடன் காணப்பட்ட பெண். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட்டுகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்த பின்னரும் சில பகுதிகளில் அந்தப் பழக்கம் காணப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

மரினா பே சேண்ட்ஸில் உள்ள சில உல்லாசக்கூடங்களிலும் இரவு பொழுதுபோக்குக் கூடங்கள் அதிகமாகக் காணப்படும் பிரின்செப் ஸ்திரீட்டிலும் அந்த நிலவரத்தைக் கண்டதாக அது குறிப்பிட்டு உள்ளது.

சுகாதார அறிவியல் ஆணையம் உட்பட பல துறை அதிகாரிகளின் அமலாக்க நடவடிக்கை அதிகரித்திருக்கும் வேளையிலும் மின்சிகரட்டு பயன்படுத்துவோரை அப்பகுதிகளில் காணமுடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் சில பொழுதுபோக்குக் கூடங்களுக்கு அந்த செய்தியாளர் சென்று நிலவரத்தை நோட்டமிட்டார்.

மின்சிகரெட்டுகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்த ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குப் பின்னரும் ஒருமுறை அவர்கள் அந்தக் கூடங்களுக்குச் சென்றனர்.

அங்கெல்லாம் மின்சிகரெட்டுகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துவோரைக் காணமுடிந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, பிரின்செப் ஸ்திரீட் பொழுதுபோக்குக் கூடங்களின் பின்னால் உள்ள குறுகலான சந்துகளில் மின்சிகரெட் பயன்படுத்துவோர் ஒன்றுகூடி இருந்தனர்.

இதற்கு முன்னர், ஜூலை மாதம் அந்த இடத்திற்குச் சென்றபோது மதுபானக் கூடங்களின் வெளியேயும் உல்லாக்கூட வளாகத்தின் உள்ளேயும் மின்சிகரெட்டு பயன்படுத்துவோரைக் காணமுடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் கூறினர்.

அதன் பின்னர், வளாகங்களைச் சுற்றிலும் மின்சிகரெட்டுகளுக்கு எதிரான எச்சரிக்கை அறிவிப்புகளை அந்தக் கூடங்கள் அதிகப்படுத்தின.

இருப்பினும், சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) அதிகாலை 1 மணியளவில் 20களிலுள்ள இளையர் ஒருவர் ஸூக் (Zouk) உல்லாசக்கூடத்தின் புகைபிடிப்புப் பகுதியில் மின்சிகரெட் பயன்படுத்தியதைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இரவுநேர பொழுதுபோக்குக் கூடங்களில் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 23 வரை சோதனை நடத்தியதாக அந்த செய்தித்தாள் அறிகிறது.

குறிப்பாக, ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு மட்டும் அவர்களின் சோதனையில் மின்சிகரெட் குற்றங்களுக்காக 115 பேர் பிடிபட்டனர். கேபோட் எனப்படும் எட்டோமிடேட் ரசாயனம் அடங்கிய மின்சிகரெட் சாதனம் வைத்திருந்த குற்றத்திற்காக அவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்