எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது அதிகாரத்துவ எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் போலிப் பதிவொன்று இடம்பெற்றதாகப் புகார் அளித்திருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) இரவு 11.08க்குப் பாரம்பரிய உடை அணிந்திருந்த தெற்காசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் நிழற்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. படத்தின் மேலே இடப்பக்கம் ‘R’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏறக்குறைய 10 நிமிடம் இணையத்தில் இருந்த அந்தப் பதிவு பின்னர் அகற்றப்பட்டது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்குத் தெரியவந்தது.
இடைப்பட்ட குறுகிய நேரத்திற்குள் 2,000க்கும் மேற்பட்டோர் பதிவைப் பார்த்துவிட்டனர். 20க்கும் அதிகமான முறை அது மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டது. அந்தக் கணக்கைப் பார்ப்போரின் வழக்கமான ஈடுபாட்டு விகிதத்தைக் காட்டிலும் அது அதிகம். எஸ்எம்ஆர்டியின் அதிகாரத்துவ எக்ஸ் கணக்கான எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷனை 471,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். வழக்கமாக அந்த ஊடகம் ரயில் சேவைகளில் ஏற்படும் தடங்கல் குறித்த ஆக அண்மை விவரங்களையும் அறிவிப்புகளையும் பதிவிடும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த எஸ்எம்ஆர்டி போலிப் பதிவு குறித்து ஆராய்ந்து வருவதாகச் சொன்னது. எக்ஸ் தளத்திடம் புகார் கொடுத்துவிட்டதாகவும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
போலிப் பதிவு இணையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ரெடிட் (Reddit), ஹார்ட்வேர்ஸோன் (HardwareZone) போன்றவை எஸ்எம்ஆர்டியின் எக்ஸ் பக்கம் ஊடுருவப்பட்டிருக்கக்கூடும் அல்லது கணக்கை நிர்வகிப்பவர் தவறுதலாகச் சொந்த நிழற்படத்தைப் பதிவேற்றியிருக்கக்கூடும் என்று குறிப்பிட்டன.
விசாரணை நடைபெறுகிறது.


