எட்டு மாதங்களுக்கு முன்பு மாலத்தீவு வெளிநாட்டுப் பள்ளிப் பயணத்தின்போது 15 வயது மாணவர் இறந்தது தற்போது ‘கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம்’ என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருவதாக மாலத்தீவு காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தெரிவித்துள்ளது.
விசாரணை நடைமுறை குறித்து மரணமடைந்த ஜென்னா சானின் குடும்பத்தாருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், விசாரணை தொடர்பான அதிகாரபூர்வ ஆவணங்கள் எதுவும் அவர்களுடன் பகிரப்படவில்லை என்று சேனல் நியூஸ் ஏஷியாவுக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலில் காவல்துறை தெரிவித்தது.
செயின்ட் ஜோசஃப்ஸ் இன்ஸ்டிடியூஷன் (எஸ்ஜேஐ) அனைத்துலகப் பள்ளியில் பயின்ற ஜென்னா, நவம்பர் 8ஆம் தேதி தேசிய இளையர் சாதனை விருது தொடர்பான பயணத்தின் போது உயிரிழந்தார்.
மாலத்தீவு ஊடகமான ‘தி எடிஷன் (The Edition) வெளியிட்ட செய்தியில், டிகுரா தீவின் அலிஃபு டாலு பவளப் பாறை பகுதியில் ஸ்னோர்க்கலிங் எனப்படும் கடல் நீருக்குள் நீந்திக்கொண்டிருந்தபோது, பின்பக்கமாகத் திரும்பிய படகின் இயந்திர விசிறி மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜென்னாவின் பெற்றோர் கடந்த வாரம் மாலத்தீவு அதிகாரிகளிடமிருந்தோ அல்லது பள்ளியிடம் இருந்தோ அதிகம் கேள்விப்படவில்லை என்று சேனல் நியூல் ஏஷியாவிடம் கூறினர்.
எனினும், சம்பவம் குறித்த முழு விவரத்தையும் திரட்ட விரிவான முயற்சிகளை மேற்கொண்டதாகப் பள்ளி கூறியது. பலமுறை கோரிக்கை விடுத்தும் மாலத்தீவு அதிகாரிகளிடம் இருந்து விசாரணை குறித்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஜான்ஸ்டன் தெரிவித்தார்.
“இந்த வழக்குடன் தொடர்புடைய சிலரைச் சந்தித்து விசாரிக்க மாணவரின் குடும்பாத்தாரிடமிருந்து அதிகாரபூர்வமற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகச் செவ்வாயன்று மாலத்தீவு காவல்துறை, தெரிவித்துள்ளது.

