மின்சிகரெட் புழக்கத்திற்கு எதிராக சிங்கப்பூர் கடும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கும் வேளையில் வெளிநாடுகளில் அதன் பயன்பாடு குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
மின்சிகரெட்டுகளை அனுமதிக்கும் நாடுகளில் அவற்றைப் பயன்படுத்தும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது ஓர் ஆபத்தான நிலவரம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிங்கப்பூர் மின்சிகரெட்டுகளைத் துடைத்தொழிக்க மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டும் மலேசிய சுகாதார நிபுணர்கள் மலேசிய அரசாங்கமும் அதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளனர்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்திய ஆய்வு, மலேசியாவில் சிகரெட் பிடிப்போர் எண்ணிக்கை குறைந்து மின்சிகரெட் புழக்கம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மாணவர்கள் மற்றும் இளையர்களிடையே அந்தப் புதிய பழக்கம் அன்றாடம் அதிகரித்து வருவதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
எனவே, சுகாதார நன்மைகளைக் கருத்தில் கொண்டு மலேசியாவில் மின்சிகரெட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என அந்தச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆயினும், மின்சிகரெட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை பொதுமக்களைப் பயமுறுத்தும் செயல் என்று நியூசிலாந்தைச் சேர்ந்த குழு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.
இந்தோனீசியாவிலும் அதேபோன்ற கருத்து நிலவுகிறது. சிங்கப்பூரைப் போல மின்சிகரெட்டுகளைத் தடை செய்யப் போவதில்லை என்று இந்தோனீசியாவின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. அதேநேரம் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இருப்பதாக அது கூறியுள்ளது.
செப்டம்பர் 1 முதல் சிங்கப்பூர் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தி உள்ளது. மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோருக்கு எதிரான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவற்றை விநியோப்போருக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டு உள்ளது. மயக்கம், மனக்குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய எட்டோமிடேட் ரசாயனம் போதைப்பொருள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கேபோட்ஸ் மின்சிகரெட் சாதனங்களில் அந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மின்சிகரெட்டுகளை சிங்கப்பூர் கடந்த 2018ஆம் ஆண்டே தடை செய்துவிட்டது.

