தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் முதல் பல பயன் போர்க்கப்பல்

2 mins read
b7056d79-67c3-4a83-9057-28cb4232e558
சிங்கப்பூரின் பல பயன் போர்க் கப்பல்களில் முதலாவதான ‘விக்டரி’ செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அறிமுகம் செய்யப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், அதன் புதிய வகைப் போர்க்கப்பல்களில் முதலாவதை அறிமுகம் செய்திருக்கிறது. பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் ஆளில்லாக் கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பல பயன் போர்க்கப்பல்களில் முதலாவதான ‘விக்டரி’யைத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கும் அவரின் துணைவியாரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அறிமுகம் செய்துவைத்தனர். எஸ்டி இஞ்சினியரிங் நிறுவனத்தின் பெனோய் கப்பல்தளத்தில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

சிங்கப்பூர்க் கடற்படையில் ஏற்கெனவே பல்லாண்டாக இருந்துவரும் ஏவுகணை எதிர்ப்புக் கப்பல்களுக்குப் பதிலாக 2028ஆம் ஆண்டிலிருந்து புதிய பல பயன் போர்க்கப்பல்கள் கட்டங்கட்டமாகச் சேர்க்கப்படும். பல பயன் போர்க்கப்பல்கள் அதிநவீனமானவை. மேம்பட்ட உணர்கருவிகள், ஆயுதக் கட்டமைப்புகள், ஒருங்கிணைப்பு ஆற்றல்கள் முதலிய அம்சங்களை அவை கொண்டிருக்கும்.

புதிய விக்டரி கப்பல், கடற்படையில் ஆகப் பெரியது. பல்வேறு ஆளில்லாக் கட்டமைப்புகளுக்குத் தேவையான ஆற்றலையும் கட்டுப்பாட்டையும் அது கொண்டிருக்கும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

கப்பலின் உட்பகுதியில் எட்டுக் கொள்கலன்கள் உள்ளன. புதிய கப்பல்கள் நீக்குப்போக்காக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனிதநேய உதவிகள், பேரிடர் மீட்புப் பணிகள் முதலியவற்றைச் செய்வதற்குரிய மருத்துவ வசதிகளையும் அவை கொண்டிருக்கும்.

பல பயன் போர்க்கப்பல் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டது அல்ல என்றார் திரு சான். அது இன்னும் 20, 30 ஆண்டுகள் சேவையில் இருக்கும் என்று அவர் சொன்னார். புதிய போர்க்கப்பலின் அறிமுக நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் பேசினார்.

அடுத்த 30 ஆண்டுக்கு எந்தவொரு கப்பலின் செயல்பாட்டுக்கும் என்ன தேவைப்படும் என்பதைச் சொல்ல இயலாது என்று அவர் சொன்னார்.

“மாறாக, நமது நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ப உருமாறும் கப்பல் வேண்டும். அதனால்தான் புதிய ஆற்றல்களை மெருகேற்றும் வகையில் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார் திரு சான்.

அறிமுக நிகழ்ச்சியில் பேசிய எஸ்டி இஞ்சினியரிங்கின் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் சோங், பல பயன் போர்க்கப்பலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டார். அதிநவீனப் போர்க்கப்பலையும் ஆளில்லாக் கட்டமைப்புகளைக் கொண்ட தாய்க்கப்பலையும் ஒருங்கிணைத்த உலகின் முதலாவது கப்பல் அது என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் தற்காப்பு ஆற்றல்களை வலுப்படுத்தும் கடற்படையின் முயற்சிகளில் அது முக்கியப் படிக்கல்லாக அமையும் என்றார் திரு சோங்.

புதிய வகைக் கப்பல்கள், சிங்கப்பூரில் எஸ்டி இஞ்சினியரிங் நிறுவனத்தால் கட்டப்படும். தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பான டிஎஸ்ஓ, எஸ்டி எஞ்சினியரிங் ஆகியவற்றுடன் அனைத்துலக நிறுவனங்களும் சேர்ந்து அவற்றை உருவாக்குகின்றன.

குறிப்புச் சொற்கள்