சீன நிறுவனமான யூடாங் குழுமம் (Yutong Group) தயாரித்த 20 மின்சாரப் பொதுப் பேருந்துகளைச் சீனாவிலிருந்து கட்டுப்படுத்த முடியாது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தெரிவித்துள்ளது.
20 பேருந்துகளிலும் எந்தவிதமான தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் வசதிகளும் (remote-control) இல்லை என்றும் ஆணையம் திங்கட்கிழமை (நவம்பர் 17) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
அண்மையில், நார்வே நாட்டின் பொதுப் போக்குவரத்து நிறுவனமான ரூட்டர் தனது பேருந்துகளில் யூடாங் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு வசதிகள் இருப்பதைக் கண்டுபிடித்ததாகச் செய்திகள் வெளியாகின.
பேருந்தில் உள்ள மென்பொருள்களைப் புதுப்பிப்பதைச் சரிசெய்வது உள்ளிட்டவற்றை யூடாங் நிறுவனத்தால் தொலை தூரத்தில் இருந்தவாறே செய்ய முடியும் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் இணையப் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் ரூட்டர் கூறியது.
இதையடுத்து ரூட்டர், இம்மாதத் தொடக்கத்தில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை நடப்புக்குக் கொண்டுவந்தது. ஊடுருவல்கள் நடக்காமல் இருக்க இணையக் கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்தியது.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள யூடாங் குழுமத்தின்தயாரித்துள்ள பேருந்துகளில் கட்டுப்படுத்தும் வசதிகள் இருக்கிறதா என்று ‘சிஎன்ஏ’ நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது.
அதற்குப் பதிலளித்த ஆணையம், “சிங்கப்பூரில் யூடாங் தயாரித்த 20 மின்சாரப் பேருந்துகள் சேவையில் உள்ளன. அவை பொதுப் போக்குவரத்திற்கு 2020ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன,” என்று குறிப்பிட்டது.
“இந்த இருபது பேருந்துகளிலும் தொலைதூர மென்பொருள் புதுப்பிப்பு வசதியும் வாகனத்தைக் கட்டுப்படுத்தும் வசதியும் இல்லை,” என்று ஆணையம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“யூடாங் நிறுவனத்தால் அதன் பேருந்துகளை தூரத்திலிருந்து கட்டுப்படுத்தவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ முடியாது. செய்ய முடியாது. வாகனங்களின் பராமரிப்பு மற்றும் செயல்திறனைக் கணக்கிட மட்டும்தான் அது தரவுகளைச் சேகரிக்கிறது,” என்று தெரிவிக்கப்பட்டது.
“மின்சாரப் பேருந்துகளுக்கான மென்பொருள் புதுப்பிப்புகளுக்கு உரிமையாளர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே புதுப்பிப்பு நடக்கும்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே ரூட்டர் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை யூடாங் மறுத்துள்ளது. தொலை தூரத்திலிருந்து வாகனங்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல என்றும் அது கூறியது.

