சவாலாக இருந்துவரும் உலகச் சூழலில் போட்டித்தன்மையுடன் விளங்க சிங்கப்பூர் தனது பொருளியலைத் தொடர்ந்து மேம்படுத்தவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) ஜிஐசி நிறுவனத்தின் ‘ஜிஐசி இன்சைட்ஸ்’ இரவு விருந்து நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றியபோது திரு வோங் இதனைக் குறிப்பிட்டார் என்று ஏஷியாஒன் ஊடகம் தெரிவித்தது. திரு வோங், நிதி அமைச்சர், ஜிஐசி துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகிக்கிறார்.
உலகளவில் பல தரப்பினருக்கும் நன்மையளித்த, பன்முக அணுகுமுறையை மையமாகக் கொண்ட உலகளாவிய முறை இப்போது படிப்படியாக அழிந்து வருகிறது என்று திரு வோங் குறிப்பிட்டார்.
குறைவான வரி, ஏற்கெனவே நடப்பில் உள்ள விதிமுறைகள் போன்றவற்றுக்கு ஏற்றவாறு முதலீட்டாளர்கள் பற்பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தனர். ஆனால், அந்த அம்சங்களில் நாடுகள் இப்போது தங்கள் அணுகுமுறையை மாற்றுவது குறித்துப் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் வோங் சுட்டினார்.
“தற்போது எந்த நாடும் முழுமையாகத் தன்னிறைவு அடைய முடியாது. அதேவேளை, கூடுதல் மீள்திறன், பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு ஓரளவு குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளவும் கூடுதலாகச் செலவு செய்யவும் அதிக அரசாங்கங்கள் தயாராய் இருக்கின்றன,” என்று திரு வோங் எடுத்துச் சொன்னார்.
எனினும், இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் முதலீட்டுச் சந்தைகள் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதாக அவர் சுட்டினார். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்ப அம்சங்கள் தரும் நம்பிக்கை இதற்குக் காரணம் என்று திரு வோங் சொன்னார்.
செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்ப அம்சங்களால் ஆக்கத்திறன் தொடர்பில் பெரிய அளவில் பலனடைய முடியும் என்றும் புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் முதலீட்டாளர்கள் நம்புவதாக பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
எனினும், செயற்கை நுண்ணறிவில் செய்யும் முதலீடுகளிலிருந்து பெறப்படும் நன்மைகள் ஒட்டுமொத்த பொருளியலைச் சென்றடைய காலம் ஆகும் என்றும் அவர் எச்சரித்தார். அதேநேரம், எல்லா தொழில்நுட்பப் ‘புரட்சிக்கும்’ தொடக்கத்தில் இருந்த ஆரவாரம் உறுதுணையாக இருந்திருப்பதையும் அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“குறுகிய காலத்தில் நிலைமை சீராகும். அப்போது அதன் தாக்கம் உணரப்படும். இது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சந்தைகளுக்கும் பொருந்தும்,” என்று பிரதமர் வோங் விவரித்தார்.

