அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் (GLS) இடம்பெற்று உள்ள உறுதிசெய்யப்பட்ட பட்டியலில் இருந்து தனியார் குடியிருப்புக்கான நில விநியோகம் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் குறைவாக இருக்கும்.
அந்தத் திட்டத்தின்கீழ் 4,725 தனியார் வீடுகளைக் கட்டுவதற்கான நிலம் விநியோகிக்கப்பட இருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 13) கூறியது.
ஆண்டின் முற்பாதியில் 5,030 தனியார் வீடுகளுக்கான நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போதையை விநியோகம் அதில் இருந்து 6.1 விழுக்காடு குறைவு.
இருப்பினும், ஒதுக்கப்பட்ட பட்டியலில் இருந்து அதிகமான நில விநியோகம் இருக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
ஒதுக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்று உள்ள நிலங்களின் விற்பனை இரண்டு சூழ்நிலைகளில் தொடங்கும்.
நிலத்தை வாங்க சொத்துச் சந்தையில் போதுமான ஆர்வம் இருந்தாலோ சொத்து மேம்பாட்டாளரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டாலோ அந்த விற்பனை தொடங்கும்.
உறுசெய்யப்பட்ட பட்டியலில் இருந்து விற்பனைக்கு விநியோகிக்கப்படும் நிலத்தின் அளவு தற்போது குறைந்ததற்கு ‘Mogul.sg’ என்னும் சொத்து நிறுவனத்தின் ஆராய்ச்சி அதிகாரியான நிக்கலஸ் மார்க் சில காரணங்களைத் தெரிவித்து உள்ளார்.
பொருளியல் தடுமாற்றம் மற்றும் வேலைச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற போக்கு ஆகியன அவர் தெரிவித்திருக்கும் காரணங்களில் குறிப்பிடத்தக்கவை.
தொடர்புடைய செய்திகள்
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், தற்போதைய நில விநியோகம் 2015ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் விநியோகிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகம் என ‘ஹட்டன்ஸ் ஏஷியா’ சொத்து நிறுவனத்தின் தரவு பகுப்பாய்வுப் பிரிவு மூத்த இயக்குநர் லீ ஸெ டெக் குறிப்பிட்டு உள்ளார்.
அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் குடியிருப்புக்காக மொத்தம் 22 காலி மனைகள் விநியோகிக்கப்படும். அவற்றின் விவரங்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அறிவிக்கப்பட்டன.
அந்தக் காலிமனைகளில், உறுதிசெய்யப்பட்ட பட்டியலில் இருந்து 10, ஒதுக்கப்பட்ட பட்டியலில் இருந்து 12 காலிமனைகள் விற்பனைக்கு விநியோகிக்கப்படும். அவற்றில் ஏறத்தாழ 9,200 தனியார் வீடுகளைக் கட்ட முடியும். ஆண்டின் முற்பாதியில் விநியோகிக்கப்பட்ட 8,505 வீடுகளுக்கான நிலப் பகுதிகளைக் காட்டிலும் இது அதிகம்.
குடியிருப்புகள் தவிர, மொத்தம் 178,315 சதுர மீட்டர் அளவில் வர்த்தகங்களை நிறுவவும் 880 ஹோட்டல் அறைகளைக் கட்டவும் அந்த நிலம் பயன்படும்.

