ஆசியாவின் ஆக அமைதியான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. உலக அளவில் அது ஆறாவது இடத்தைப் பிடித்தது.
அனைத்துலக அமைதிக் குறியீட்டுப் பட்டியலில் சிங்கப்பூருடன் ஜப்பான், மலேசியா ஆகிய ஆசிய நாடுகள் இடம்பிடித்தன. அதில் ஜப்பான் 12வது இடத்தையும் மலேசியா 13வது இடத்தையும் பிடித்தன.
அனைத்துலக அமைதிக் குறியீட்டைத் தரவரிசைப்படுத்திய ‘ஐஇபி’ எனப்படும் பொருளியல், அமைதிக்கான கழகம், பாதுகாப்பைப் பொறுத்தவரை சிங்கப்பூர் ஆக உயரிய இடத்தைப் பிடித்ததாகக் கூறியது.
கடுமையான சட்டங்கள், குறைவான குற்றச்செயல்கள், பாதுகாப்பான சுற்றுச்சூழல் ஆகியவை சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் பொது ஒழுங்கை உறுதிப்படுத்த உதவியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரின் தெருக்கள் வெளிச்சமாக உள்ளன என்றும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் இருப்பதால் வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் எளிதாக நடப்பதில்லை என்றும் அவர்கள் கூறினர்.
உலகின் ஆக அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் வந்தது. பாதுகாப்பு, நீடித்த போர், ராணுவமயமாக்கம் ஆகிய மூன்று குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் மதிப்பிடப்பட்டன.
ஐஸ்லாந்துக்கு அடுத்தபடியாக அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகியவை வந்தன.