தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஆசிரியர்கள் அதிக நேரம் பணியாற்றுகின்றனர்: ஆய்வறிக்கை

2 mins read
கடினமாக உழைக்கும் ஆசிரியர்களின் தரவரிசையில் சிங்கப்பூர் மூன்றாம் நிலை
8396a048-b378-4573-80af-b6dc4e19fe37
பாடத்திட்டங்களை வகுத்தல், ஆலோசனை வழங்குதல், பெற்றோர் சந்திப்பு ஆகியவற்றில் ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கற்பித்தலிலும் பிழை திருத்துவதிலும் குறைவான நேரத்தைச் செலவிடும் சிங்கப்பூர் ஆசிரியர்கள், நீண்ட நேரம் பணியாற்றுவதாக உலகளாவிய ஆய்வு கண்டறிந்துள்ளது. பாடத்திட்டங்களை வகுத்தல், ஆலோசனை வழங்குதல், பெற்றோர் சந்திப்பு ஆகியவற்றில் அவர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 194,000 ஆசிரியர்கள் அந்த ஆய்வில் பங்கேற்றனர். அவர்கள் 55 கல்வித் திட்டங்களில் உள்ளடங்கியோர் ஆவர். ஆய்வினை ஒஇசிடி (OECD) என்ற பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு நடத்தியது. அனைத்துலகக் கற்பித்தல் கற்றல் ஆய்வு (Talis) முடிவுகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) வெளியிடப்பட்டன.

ஆய்வில் சிங்கப்பூர் ஆசிரியர்களின் சிறந்த பண்புகளும் வெளிப்பட்டுள்ளன. அவர்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களை விரைவாகப் பின்பற்றுவதோடு, நான்கில் மூவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறன்களை எளிதாக்க முயல்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்துலக சராசரி விகிதத்துடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்குக்கும் அதிகமாகும்.

சிங்கப்பூர் ஆசிரியர்கள் வாரத்திற்கு 47.3 மணிநேரம் பணியாற்றுகின்றனர். இது, ஒஇசிடி அமைப்பின் வாராந்தர சராசரியான 41 மணி நேரத்தைவிட அதிகம். உலகில் மிகவும் கடினமாக உழைக்கும் ஆசிரியர்கள் தரவரிசையில் சிங்கப்பூர் மூன்றாம் நிலையில் உள்ளது. வழக்கம்போல் 55 மணிநேரம் பணியாற்றும் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து இரண்டாம் நிலையில் இருக்க, சீனாவின் ஷாங்காய் மாநிலம் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

இதே ஆய்வு, 2018ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் 46 மணிநேரம் பணியாற்றியதை பதிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் அனைத்து 145 உயர்நிலைப் பள்ளிகள், 10 தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும் இணையக் கேள்விப் படிவங்களில் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நடந்த ஆய்வில் பதில்களை வழங்கியுள்ளனர்.

ஆய்வில் பத்து ஆசிரியர்களில் எண்மர் தங்கள் பணிகள் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். நீண்ட காலத்துக்குப் பலரின் தேர்வாக ஆசிரியர் பணி அமைவதற்கான செயல்முறைகளை தொடர்ந்து உறுதிசெய்யப்போவதாகக் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்