தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையிடத்தில் பாகுபாடு குறித்த புதிய மசோதா

2 mins read
48ae02b5-b149-488a-9d61-3d756e588d91
வேலையிட நியாயத்தன்மைச் சட்டத்தின் இரண்டாம் மசோதாவை அக்டோபர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

வேலையிடப் பாகுபாடு குறித்த கோரிக்கைகளைக் காலந்தாழ்த்தாமல் முன்வைப்பதை வலியுறுத்தும் புதிய மசோதாவை மனிதவள துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

2027 முதல் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வேலையிடப் பாகுபாடு கோரிக்கைகளை முன்வைத்தால்தான் அவை கருத்தில்கொள்ளப்படும் என மசோதா பரிந்துரைக்கிறது.

காலம் செல்லச் செல்ல, ஆதாரங்கள் அழியக்கூடும் என்பதாலும் பழைய சம்பவங்கள் மீண்டும் கிளறப்படாது என்ற நம்பிக்கையை முதலாளிகளுக்கு அளிக்கவேண்டும் என்பதாலும் இது பரிந்துரைக்கப்படுகிறது என மனிதவள அமைச்சு கூறியது.

இந்த மசோதாவின்படி, எந்தக் கட்டத்தில் பாகுபாட்டுக்குரிய வேலையிடத் தீர்மானம் நிகழ்ந்தது என்பதைப் பொறுத்து கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மாறுபடும்.

பணியமர்த்தும் வேளையில் பாகுபாட்டுற்குரிய வேலையிடத் தீர்மானத்தை முதலாளி அறிவித்தால், அறிவித்து ஒரு மாதத்திற்குள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிலிருக்கும்போது நடந்தால் தீர்மானம் அறிவிக்கப்பட்டு ஆறு மாத அவகாசமும், பணியிலிருந்து நீக்கப்படும்போது நடந்தால் வேலையின் இறுதிநாளிலிருந்து ஒரு மாத அவகாசமும் வழங்கப்படும்.

இனம், மொழி, சமயம், வயது, திருமண நிலை, குடியுரிமை, கர்ப்பம், பராமரிப்புப் பொறுப்பு, உடற்குறை, மனநலம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டுடன் எடுக்கப்படும் எந்த வேலையிடத் தீர்மானத்துக்கும் இது பொருந்தும்.

சச்சரவுகளுக்குச் சுமூகமான தீர்வுகள்

வேலையிடத்தில் பாகுபாடு குறித்த கோரிக்கைகளுக்கு எளிதாக, சுமூகமாகத் தீர்வுகாண, அவற்றில் பெரும்பாலானவை நீதிமன்றத்தில் அல்லாமல் வேலை கோரிக்கை நடுவர் மன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மசோதா முன்மொழிகிறது.

இம்மன்றங்கள், வழக்கறிஞரின்றி குறைந்த செலவில் வேலையிடச் சச்சரவுகளைத் தீர்த்துவைக்க 2017ல் அமைக்கப்பட்டன. அவற்றில் நீதிபதியின் பங்கு அதிகம்.

மசோதாவின்படி, ஊழியர்கள் இம்மன்றங்களை நாடுவதற்கு முன்பு, முதற்கட்டமாக நிறுவனத்தின் சச்சரவுத் தீர்வு அணுகுமுறையை நாடவேண்டும். தீர்வு கிடைக்காவிடில், மனிதவள அமைச்சின் வேலையிட நியாயத்தன்மை ஆணையரிடம் சமரசக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும்; ஊழியருக்கும் முதலாளிக்கும் இடையே சமரசப் பேச்சு நடக்கும். அதுவும் பலனளிக்காவிட்டால்தான் வேலை கோரிக்கை நடுவர் மன்றத்தை நாடமுடியும்.

தற்போது $20,000க்கு உட்பட்ட (தொழிற்சங்கம் உதவினால் $30,000க்கு உட்பட்ட) கோரிக்கைகள்தான் இம்மன்றங்களில் முன்வைக்கப்படுகின்றன.

மசோதா நிறைவேற்றப்பட்டால் $250,000க்கு உட்பட்ட வேலையிடப் பாகுபாடு கோரிக்கைகள் இம்மன்றங்களில் முன்வைக்கப்படலாம். அத்தொகையை மீறினால்தான் கோரிக்கை உயர் நீதிமன்றத்தை எட்டும்.

சம்பளம், முறையற்ற வேலைநீக்கம் கோரிக்கைகளுக்கு இது பொருந்தாது.

இம்மன்றங்களில் வழக்கறிஞர் அனுமதிக்கப்படாவிட்டாலும், ஊழியர்களும் முதலாளிகளும் உதவிக்குத் தொழிற்சங்கங்களை நாடலாம். தொழிற்சங்கப் பிரதிநிதித்துவம் இல்லாத நிறுவனங்களில் பணியாற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள், முத்தரப்பு இடையீட்டு ஆலோசகர்களிடம் உதவியை நாடலாம்.

அனைத்து வேலையிட நியாயத்தன்மை கோரிக்கைகளும் பொதுமக்களின் முன்னிலையில் அல்லாமல், தனிப்பட்ட முறையிலேயே விசாரிக்கப்படும்.

எந்த அடிப்படையும் இல்லாத கோரிக்கைகளை நீதிபதி ரத்துசெய்யலாம்; அவற்றை முன்வைப்போருக்கு இழப்பீடு விதிக்கப்படலாம்.

இம்மசோதா வேலையிட நியாயத்தன்மைச் சட்டத்தின் இரண்டாவது மசோதாவாகும். அச்சட்டத்தின் முதல் மசோதா ஜனவரி 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்