கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் அமைச்சர் ஒருவர், சுகாதாரத் துறையில் திறனாளர்கள் வெளியேற்றத்தைச் சமாளிக்க ஒரு புதுமையான தீர்வைப் பரிந்துரைத்துள்ளார்.
மலேசியாவில் படித்த மருத்துவ வல்லுநர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய முடிவெடுத்தால், சிங்கப்பூர் மலேசியாவுக்கு இழப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார்.
அவ்வாறு வசூலிக்கப்படும் பணத்தைக் கொண்டு மலேசியாவின் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்தலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
“அவ்வாறு செய்வதுதான் நியாயமாக இருக்கும்,” என்று பொருளியல் திட்டமிடலுக்குப் பொறுப்பு வகிக்கும் முன்னாள் அமைச்சருமான திரு ரஹ்மான், செப்டம்பர் 9ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
மலேசியாவில் நிலவி வரும் கடுமையான சுகாதார வல்லுநர்களின் பற்றாக்குறைக்குத் தீர்வாக திரு ரஹ்மான் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர், மலேசிய சுகாதார வல்லுநர்களுக்குக் கவர்ச்சிகரமான சம்பளத்தையும் சலுகைகளையும் வழங்கி, அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த இழப்பீட்டுத் தொகை, மலேசிய சுகாதார வல்லுநர்களைத் தண்டிக்க அல்ல, மாறாக “வரி செலுத்துவோரின் நிதியைக் கொண்டு உள்ளூரில் பயிற்சி பெற்ற பிறகு அவர்கள் மற்ற நாடுகளில் வேலை செய்ய செல்வதற்கு இழப்பீடாக அதை பார்க்கலாம்,” என்றார் அவர்.
“இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதில் சிங்கப்பூருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நான் நம்புகிறேன்,” என்று திரு ரஹ்மான் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவில் நன்கு தேர்ச்சி பெற்ற சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்களை சிங்கப்பூர் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் விவகாரம் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், சிங்கப்பூர் சுகாதார அமைச்சு, கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்தியது. மலேசிய மருத்துவர்களை சிங்கப்பூரில் பணிபுரிய ஈர்க்கும் முயற்சியில், ஆரம்ப சம்பளமாக S$110,000 வழங்கியது.
தனது சிறந்த மற்றும் திறமையான மருத்துவப் பட்டதாரிகளில் குறைந்தது 30 பேர் ஒவ்வோர் ஆண்டும் மலேசியாவை விட்டு சிங்கப்பூரில் பணியாற்றச் செல்கிறார்கள் என்று 2022ஆம் ஆண்டில், மலாயா பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை தலைவர் கூறினார்.
ஒவ்வொரு மாணவருக்கும் பயிற்சிக்காக கிட்டத்தட்ட RM1 மில்லியன் (S$305,000) செலவிட்ட போதிலும் இது நடந்ததாக அவர் கூறினார்.

