காஸாவில் நீண்டகால மீட்பிலும் மறுசீரமைப்புப் பணிகளிலும் சிங்கப்பூரின் ரஹ்மத்தான் லில் ஆலமின் அறநிறுவனம் கவனம் செலுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
காஸாவின் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகிய துறைகளுக்கு ஆதரவளிக்க புதிய திட்டங்களை அறநிறுவனம் வகுக்கிறது.
அந்த அடிப்படையில், ‘ஹியூமானிடி மேட்டர்ஸ்’ அமைப்பு, எகிப்திய செம்பிறைச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து காஸாவில் நடமாடும் சுகாதார மருந்தகங்களை அமைக்க ரஹ்மத்தான் லில் ஆலமின் அறநிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நடமாடும் சுகாதார மருந்தகங்களில் தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் பராமரிப்புச் சேவைகள், தடுப்பூசிகள் ஆகியவற்றுடன் அடிப்படை சிகிச்சைகளும் வழங்கப்படும். உள்ளூர் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் மருந்தகத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
ரஹ்மத்தான் லில் ஆலமின் அறநிறுவனம் காஸா மக்களுக்குக் கூடாரங்களையும் தங்குமிடங்களையும் அமைத்துத் தருவதுடன் முறையான சமையலறை வசதியை உருவாக்குவதற்கான வழிகளையும் ஆராய்கிறது.
காஸாவில் வீடுகளை இழந்த பிள்ளைகளுக்கு இணையம்வழி கல்வியை வழங்க ரஹ்மத்தான் லில் ஆலமின் அறநிறுவனம், யுனிசெஃப் எனும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்புடன் இணைந்து செயல்படவிருக்கிறது.
காஸாவில் உள்ள மாணவர்களையும் சிங்கப்பூரிலும் வட்டார நாடுகளிலும் உள்ள தகுதிபெற்ற ஆசிரியர்களையும் இணைப்பது அறநிறுவனம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்று.
அறநிறுவனத்தின் பிரதிநிதிகள் யுனிசெஃப் அமைப்பையும் எகிப்திய செம்பிறைச் சங்கத்தையும் அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து நவம்பர் 1ஆம் தேதி வரை நேரில் சென்று சந்தித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ரஹ்மத்தான் லில் ஆலமின் அறநிறுவனம் காஸா பணிக்கான நிதி திரட்டு மூலம் பெறப்பட்ட $2.4 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக இதற்குமுன் தெரிவித்தது.

