தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிச்சயமற்ற சூழலுக்கு சிங்கப்பூர் மேலும் ஆயத்தமாகவேண்டும்

2 mins read
43455ef8-37f8-4b0b-a1f8-eef2029e9219
வர்த்தக, தொழில் அமைச்சின் வருடாந்தர பொருளியல் கூட்டத்தில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக வரிவிதிப்புகளால் ஏற்படக்கூடிய நிச்சயமற்ற சூழலையும் வர்த்தகம், முதலீடு ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய அனைத்துலகப் பொருளியலில் ஏற்படக்கூடிய கட்டமைப்பு மாற்றங்களையும் எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராக இருக்கவேண்டும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

வரிவிதிப்பு தொடர்பான உடனடியான, நிச்சயமற்ற சூழலைச் சமாளிப்பதற்கு இந்நாடு முன்னுரிமை அளித்தாலும் புதிய அனைத்துலகப் பொருளியல் சூழலுக்கு ஏற்ப சிங்கப்பூர் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்றார் அவர்.

வர்த்தக, தொழில் அமைச்சின் வருடாந்தர பொருளியல் கூட்டத்தில் துணைப் பிரதமர் கான் உரையாற்றினார். உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அமைச்சு அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

ஏப்ரல் 2ஆம் தேதியிலிருந்து அமெரிக்கா பல்வேறு முக்கிய வர்த்தகப் பங்காளிகளுடன் உடன்பாடுகளை செய்திருந்தாலும் அதிபர் டோனல்ட் டிரம்ப், புதிய வரிகளை அறிவித்து வருவதால், ஏற்கெனவே உள்ள நிச்சயமற்ற சூழல் நீடிக்கிறது என்று கூறினார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.

“வர்த்தக உடன்பாடுகள் எப்போது நடப்புக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் முரணான கருத்துகள் எழுவதைப் பார்க்கிறோம்,” என்றார் அவர்.

சீனா, இந்தியா, சுவிட்சர்லாந்து ஆகியவற்றுடனான பேச்சுவார்த்தை தொடர்கிறது. அதேவேளை, சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகளான பகுதி மின்கடத்திகள், மருத்துவப் பொருள்கள் போன்ற துறை வாரியான கூடுதல் வரிகள் உடனடியாக நடப்புக்கு வரக்கூடும் என்றும் அமெரிக்கா மறைமுகமாகத் தெரிவித்துள்ளது.

வரி விதிப்பு அனைத்துலக விநியோகத் தொடர்களில் எதிரொலிக்கும் என்பதையும் துணைப் பிரதமர் சுட்டினார்.

“அது பயனீட்டாளர் செலவினங்களையும் நிறுவனச் செலவினங்களையும் ஒருசேரப் பாதிப்பதோடு பொருளியல் வளர்ச்சியை மந்தப்படுத்தும்,” என்றார் அவர்.

அமெரிக்காவுடன் புதிய முதலீட்டு ஒப்பந்தங்களைச் செய்வதாக உறுதிகூறியுள்ள நாடுகள் பிற நாடுகளில் உள்ள முதலீடுகளைக் குறைத்துக்கொள்ளலாம் என்றும் திரு கான் குறிப்பிட்டார்.

நிறுவனங்களும், சந்தைகளையும் விநியோகத் தொடர்களையும் பன்முகப்படுத்த முடிவெடுக்கலாம்.

குறுகியகால நிச்சயமற்ற சூழலைச் சமாளிக்க இவ்வாண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழு உருவாக்கப்பட்டதைத் திரு கான் சுட்டினார்.

ஆக அண்மையில் புதிய பொருளியல் சூழலில் சிங்கப்பூரை முன்னிறுத்த அந்தப் பணிக்குழுவின் கீழ், பொருளியல் உத்திபூர்வ மறுஆய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது என்றார் அவர்.

சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதையும், காலத்துக்கு ஏற்றவாறு இருப்பதை உறுதிசெய்யவும், கட்டமைப்பு மாற்றங்களைச் சமாளிப்பதற்கான வழிகளை ஆராய்வதையும் புதிய அமைப்பு மேற்கொள்ளும் என்று திரு கான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்