கவிமாலை ஏற்பாட்டில் சிங்கப்பூர்–மலேசியா கவிதை ஆய்வரங்கம் நடைபெற்றது.
மலேசிய இயல் எழுத்தாளர் மன்றத்துடன் இணைந்து நடத்திய சிங்கப்பூர்–மலேசியா கவிதை ஆய்வரங்கம் சனிக்கிழமை (அக்டோபர் 11) பிற்பகல் 1 மணி முதல் மாலை 7 மணி வரை சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பன்மொழிக் கவிதைச் சூழலின் வளர்ச்சி, புலம்பெயர் அடையாளங்கள், சமகாலக் கவிதை விமர்சனங்கள் ஆகியவை குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் வாசிக்கப்பட்டன.
முனைவர் சித்ரா சங்கரன் வழிநடத்திய முதல் அமர்வில் சிங்கப்பூரின் சமகாலக் கவிதைகள் என்ற தலைப்பில் கவிஞர்கள் கட்டுரைகளை வழங்கினர்.
இளம்படைப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், கவிதை விமர்சன மரபின் நிலை, மலேசியக் கவிதை வளர்ச்சியில் இதழ்களின் பங்களிப்பு போன்ற தலைப்புகளில் இரண்டாவது அமர்வு நடந்தது.
மலேசிய–சிங்கப்பூர் கவிதைகளின் ஒப்பீடு, மலாய்–தமிழ் இறையியல் கோட்பாடுகள், தமிழ்க் கவிதை விமர்சன மரபின் வளர்ச்சி ஆகியவையும் பிற அமர்வுகளின்போது முன்வைக்கப்பட்டன.
மலேசியாவின் ஜோகூர் மாநில சிகாமாட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. யுனேஸ்வரனும் சிங்கப்பூர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இரா. தினகரனும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அவர்கள் “விண்மீன் பிடித் தீவு” (60 கவிதைகள் கொண்ட தொகுப்பு), “அலைகளின் உள் மொழி” (ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு) ஆகிய நூல்களை வெளியிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மலேசிய இயல் எழுத்தாளர் மன்றத் தலைவர் பொன் கோகிலம் அவர்கள் நன்றியுரையில், “இளைய தலைமுறையினரிடையே கவிதை சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ஒரு முதல்கட்ட முயற்சியாக இந்த ஆய்வரங்கம் அமைந்துள்ளது” எனக் கூறினார்.
மலேசியாவிலிருந்து நாற்பதுபேர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

