சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் 55வது ஆண்டுநிறைவு நிகழ்ச்சி

2 mins read
eea1d014-86d6-4217-8bcd-7667b3eb2f68
மீடியாகார்ப் அரங்கில் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி, சிங்கப்பூரர்களின் இதய நலனை மேம்படுத்த முனைகிறது. - படம்: சிங்கப்பூர் இதய அறநிறுவனம்

சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் ஆண்டுநிறைவு நன்கொடை நிகழ்ச்சி 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உள்ளூர்த் தொலைக்காட்சிக்கு மீண்டும் திரும்பியுள்ளது.

அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரின் துணைவியார் ஜேன் இட்டோகியும் சிறப்பித்த அந்த அறநிறுவனத்தின் 55வது ஆண்டுநிறைவு நிகழ்ச்சி மூலம் $2.6 மில்லியன் நிதி திரட்டப்பட்டது.

ஜூன் பிற்பகுதியில் மீடியாகார்ப் அரங்கில் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி, சிங்கப்பூரர்களின் இதய நலனை மேம்படுத்த முனைகிறது.

‘மீள்திறன்மிக்க இதயங்கள்’ என்ற கருப்பொருளுடன் தொடங்கிய நிகழ்ச்சி, இதய நோயாளிகள், தொண்டூழியர்கள், சுகாதார நிபுணர்கள் ஆகியோரைச் சிறப்பித்தது.

உள்ளூர் புகழாளர்களும் தொண்டூழியர்களும் நிகழ்ச்சி மேடையில் படைப்புகளைக் காண்பித்தனர். இதய நோயுடன் வாழ்பவரின் கதைகளும் பகிரப்பட்டன. 

நிகழ்ச்சியின் இறுதியில், சிங்கப்பூர் ராட்டினம், சிங்கப்பூர் விளையாட்டு மையம், ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மேற்குக் கல்லூரி ஆகிய இடங்களில் செவ்வொளி மின்னியது.

நிகழ்ச்சிக்குக் கிடைத்த பேராதரவிற்காக நன்றியுணர்வுடன் இருப்பதாக அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி ஓங் தெரிவித்தார்.

“நிதி திரட்டுவதற்கு அப்பாற்பட்டு, இந்நிகழ்ச்சி இதய அறநிறுவனத்தின் சமூகப் பங்கிற்கு வெளிச்சம் காட்டி, வருங்காலத்தில் மேம்பட்ட இதயநலத்துடன் கூடிய சிங்கப்பூரர்களை உருவாக்கும் நம் முயற்சிக்குக் கூடுதலானோரை ஈர்க்க ஆசைப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

வருமுன் காக்கக் கைகொடுக்கும் அறநிறுவனம்

1970 முதல் சிங்கப்பூர் இதய நோய் அறநிறுவனம் தற்போது மூன்று இதய நிலையங்களை நடத்தி வருகிறது. 

ஐந்து வெள்ளி போதும். இதய நோயாளிகளும் ஆபத்தில் உள்ளோரும் விலைக்கழிவுடன், முறைப்படி செயல்படும் சமூகம் சார்ந்த இதய மீளுருவாக்கத் திட்டத்தில் சேரலாம்.

நிதி தேவைப்படுவோர்க்கும் அறநிறுவனம் உதவிக்கரம் நீட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்