துயர நிகழ்விலிருந்து பாடம் கற்றுக்கொண்ட சிங்கப்பூர்: தீ பாதுகாப்பு வல்லுநர்

2 mins read
3be399ca-f570-4abd-a401-3264b05ba340
‘சிடெக்ஸ்’ கண்காட்சியில் இடம்பெற்றுள்ள எஸ்டி எஞ்சினியரிங் சாவடியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள முப்பரிமாணத் தீயணைப்பு வாகனங்களின் மாதிரிகளைப் பார்வையிடுகிறார் உள்துறை மூத்த துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கடந்த 2017 மே மாதம் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த தீச்சம்பவத்திலிருந்து சிங்கப்பூர் பாடம் கற்றுக்கொண்டது என்றும் தீப்பற்றக்கூடிய வெளிப்புறக் காப்புறைகள் (Claddings) அந்தக் கட்டடத்தில் பயன்படுத்தி இருந்ததே அத்துயர நிகழ்விற்குக் காரணம் என்றும் தேசிய தீ பாதுகாப்புச் சங்கத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான திரு ஜிம் பாலி தெரிவித்துள்ளார்.

முதலாவது சிங்கப்பூர் - அனைத்துலகப் பேரிடர், அவசரகால மேலாண்மைக் கண்காட்சி (சிடெக்ஸ்) 2025 நிகழ்ச்சியின் முதன்மைப் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது திரு பாலி இதனைத் தெரிவித்தார்.

தோ குவான் சாலையிலுள்ள சிஐடி கட்டடத்தில் அந்தத் தீவிபத்து நேர்ந்தது.

அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மேலும் 60 கட்டடங்கள் விதிமுறைகளுக்குப் பொருந்தாத காப்புறைகளைப் பயன்படுத்தி இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதனையடுத்து, தீப்பற்றக்கூடிய அந்தக் காப்புறைகள் அகற்றப்பட்டதைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை உறுதிசெய்தது. அதன்பின், கட்டாயக் கொள்கைகளையும் சான்றிதழ் செயல்முறைகளையும் அது நடைமுறைப்படுத்தியது.

மேலும், கட்டடங்களில் பாதுகாப்பற்ற காப்புறைகளை முறையின்றிப் பயன்படுத்துவதைச் சரிசெய்வது தொடர்பில் குடிமைத் தற்காப்புப் படையும் கட்டடத் துறையும் ஒத்துழைத்தன.

“இது, கடினமான பாடங்களைக் கற்றுக்கொண்டு, மீள்தன்மையுடன் செயல்பட்டு, அவற்றை உண்மையான முன்னேற்றமாக மாற்றியதற்கு அருமையான எடுத்துக்காட்டு. சிங்கப்பூர் மட்டுமன்றி, உலகளவிலான தீ, உயிர்ப் பாதுகாப்புச் சமூகத்திற்காகவும் எனக்கு இது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது,” என்று திரு பாலி கூறினார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அனைத்துலக லாப நோக்கமற்ற நிறுவனமான தேசிய தீ பாதுகாப்புச் சங்கமானது தீ, மின்சாரம் மற்றும் அவை சார்ந்த அபாயங்களால் உயிரிழப்பு, காயம், உடைமைச் சேதம், பொருளியல் இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஊழியர் கூட்டுறவு (கோசெம்) நிறுவனம், குடிமைத் தற்காப்புப் படையின் ஆதரவுடன் சிடெக்ஸ் 2025 கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. கள அனுபவங்களையும் அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்துகொள்வதே அதன் திட்டம்.

பொதுமக்கள் பாதுகாப்பு, அவசரகால மேலாண்மைக்கான அனைத்துலக ஒத்துழைப்பு, கற்றல் தளமாக சிடெக்ஸ் 2025 விளங்குகிறது என்று ‘கோசெம்’ தலைமை நிர்வாகி மைக்கல் சுவா கூறினார்.

இந்த மூன்று நாள் மாநாடு, கண்காட்சி நிகழ்வானது நவம்பர் 19 முதல் 21 வரை சிங்கப்பூர் எக்ஸ்போ மண்டபத்தில் நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்