சிங்கப்பூரில் வரும் டிசம்பர் மாதம் மழையுடன் கூடிய இரண்டு விதமான பருவநிலையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. நாட்டில் டிசம்பர் மாதம் ஆக அதிக மழை பொழிவது வழக்கம்.
இருப்பினும், இரண்டு புதிய பருவநிலையின் வருகையால் சிங்கப்பூரில் பெய்யக்கூடிய ஒட்டுமொத்த மழையின் அளவு அதிகரிக்கும் சாத்தியம் இல்லை என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். மாறாக, இரு பருவநிலையும் ஆண்டின் மற்றக் காலங்களில் மழை பெய்வதற்குத் தூண்டுதலாக அமையும் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூரில் டிசம்பரிலும் ஜனவரியிலும் வரும் வழக்கமான மழைக்காலத்திற்குக் காரணம் வடகிழக்குப் பருவமழையின் ஈரமான காலகட்டம். அப்போது குளிர்காற்று வட துருவத்திலிருந்து நிலநடுக்கோட்டை நோக்கி வீசும்.
அந்தக் காலத்தில் பொதுவாக, மூன்று கட்டத்தில் பலத்த மழை பெய்யும். அதனால் சிங்கப்பூரில் அதிக அளவு மழைப் பொழிவு பதிவாகும்.
அதற்குக் காரணம், மத்திய ஆசியா போன்ற வடகிழக்கு வட்டாரத்திலிருந்து வரும் குளிர்காற்று. அத்தகைய குளிர்ந்த காற்று, தென்சீனக் கடற்பகுதியின் வெதுவெதுப்பான நீர்நிலையைக் கடக்கும்போது ஈரப்பதம் கூடும். அது சிங்கப்பூருக்குப் பரவலான மழையையும் பலத்த காற்றையும் கொண்டுவரும். அதனால் வானிலை குளிர்ச்சியாக இருக்கும்.
இந்த ஆண்டு (2025) மழைக்காலம், லா நினா பருவநிலை திரும்பும் நேரத்துடன் சேர்ந்துவரும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் அறிகிறது. அப்போது இந்தியப் பெருங்கடற்பகுதியின் கிழக்குப் பகுதி வழக்கத்தைவிட வெதுவெதுப்பாகவும் மேற்குப் பகுதி வழக்கத்தைக்காட்டிலும் குளிராகவும் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
அந்த இரு பருவநிலையால் சிங்கப்பூரில் கூடுதலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக், இந்தியப் பெருங்கடல்களில் காற்றழுத்தத்தாலும் கடல்மட்ட வெப்பத்தாலும் மாற்றங்கள் ஏற்படுவதே அதற்குக் காரணம். சிங்கப்பூர், அந்த இரண்டு கடற்படுகைகளின் இடையில் உள்ளது. அதனால் அங்கு நிகழும் வானிலை மாற்றங்கள் இங்கும் எதிரொலிக்கும்.

