2040ல் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இருக்கும்: டிபிஎஸ்

2 mins read
c096865e-e9f4-4fbe-b6e0-2557baf68bdc
2040ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஆண்டுக்கு 2.3 விழுக்காடு உயரும் என்று எதிர்பார்ப்பதாக டிபிஎஸ் வங்கி கூறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ப் பொருளியல் 2040ஆம் ஆண்டுக்குள் இருமடங்குக்குமேல் அதிகரிக்கக்கூடும் என்றும் அப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சமமாக இருக்கும் என்றும் டிபிஎஸ் வங்கி கூறியுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு அடுத்த 15 ஆண்டுகளில் 10,000 புள்ளிகள் அதிகரிக்கும் என்றும் புதன்கிழமை (அக்டோபர் 22) வெளியிட்ட அறிக்கையில் வங்கி தெரிவித்துள்ளது.

‘டிபிஎஸ் சிங்கப்பூர் 2040 அறிக்கை’ சிங்கப்பூரின் பொருளியல் குறித்த டிபிஎஸ் வங்கியின் முன்னுரைப்பை முன்வைக்கிறது. 2040க்குள் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$1.56 டிரில்லியன்) 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் இடைப்பட்டிருக்கும் என்று அது முன்னுரைத்துள்ளது. 2024ல் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 547 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது.

மூலதன அதிகரிப்பு, மனிதவள மேம்பாடு, உற்பத்தி லாபம் ஆகியவற்றால் 2040க்குள் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்று வங்கி கூறுகிறது.

வலுவான விதிமுறை சார்ந்த கட்டமைப்பும் அதிகரிக்கும் கல்வித் தரமும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருப்பதாக அது கூறியது. கடந்த பல ஆண்டுகளில் சிங்கப்பூர் அதன் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டதற்கும் அதுவே காரணம் என்று டிபிஎஸ் குறிப்பிட்டது.

2025 முதல் 2040 வரை சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்குச் சராசரியாக 2.3 விழுக்காடு உயரக்கூடும் என்று அது முன்னுரைத்துள்ளது. மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு பல ஆண்டுகள் திருத்தப்படும் என்றும் பல்வேறு நாடுகளில் அரசாங்கங்கள் நாணய மதிப்பு குறைவதை ஆதரிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்ட டிபிஎஸ், அது சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரிக்க வழிவகுக்கக்கூடும் என்று சொன்னது.

குறிப்புச் சொற்கள்