இரண்டு நாள் பயணமாக மலேசியாவுக்கு சென்றுள்ள சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) மலேசிய தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நோர்டினைச் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் நீண்டகால, வலுவான இருதரப்பு உறவுகளை அந்த அமைச்சர்கள் இருவரும் மறு உறுதிப்படுத்தினர்.
அத்துடன், இரு நாட்டுத் தற்காப்பு அமைப்புகளுக்கு இடையே உள்ள மக்கள் சார்ந்த உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம் (ஏடிஎம்எம்), ஏடிஎம்எம்-பிளஸ் போன்ற வட்டார பலதரப்பு தளங்களில் இரு நாடுகளுக்குமிடையே உள்ள பன்னாட்டு ஒத்துழைப்பையும் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
மலேசியத் தற்காப்பு அமைச்சில் அமைச்சர் சான் சுன் சிங், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிங்கப்பூர் கடற்படைக்கும், மலேசியக் கடற்படைக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு உதவிக்கும் ஒத்துழைப்புக்குமான ஏற்பாட்டுக் குறிப்பில் இரண்டு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.
“ நீர்மூழ்கிக் கப்பல் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஏதும் நேர்ந்தால், இரு நாடுகளுக்கும் இடையே இருபக்க ஆதரவையும் உதவியையும் அளிப்பதற்கான கட்டமைப்பை இந்த ஏற்பாடு நிறுவுகிறது,” என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
“இரு அமைச்சுகளுக்கும் கடற்படைகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்புக்கு இது ஒரு சான்றாகும்.”
பயணத்தின்போது, மலேசியக் குடியிருப்பு, உள்ளூராட்சி ஆகிய துறைகளுக்கான அமைச்சர் என்கா கோர் மிங்கையும் திரு. சான் சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசிய தற்காப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ‘புஸ்பஹானாஸ்’ பாதுகாப்பு ஆய்வு மையத்தில் அமைச்சர் சான் செவ்வாய்க்கிழமை உரையாற்றுகிறார்.