பெற்றோருக்கு உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்ப் பிள்ளைகள் சங்கம்

2 mins read
158f5ce2-419a-422f-8757-e4b2afa034c1
சிங்கப்பூர்ப் பிள்ளைகள் சங்கத் தலைவர் சியா சின் சியொங் நன்கொடை நிகழ்ச்சியில் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெற்றோருக்கு உதவிகளைச் செய்ய சிங்கப்பூர்ப் பிள்ளைகள் சங்கம் என்னும் அமைப்பு முன்வந்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பிள்ளைகளுக்கான பாதுகாப்பையும் குடும்பங்களுக்கான ஆதரவையும் வலுப்படுத்துவதில் அந்தச் சங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறது.

2026ஆம் ஆண்டிலிருந்து 2030ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் மேம்படுத்தப்பட்ட திட்டம், உளைச்சலில் உள்ள குடும்பங்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து இன்னும் துரிதமாக ஆதரவு வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பராமரிப்பாளர்களுக்கான திறனை மேம்படுத்துவதிலும் திட்டம் கவனம் செலுத்தும்.

இவற்றை முன்னிட்டு ‘திரைவிங் ஃபேமிலிஸ் @ சில்ரன்ஸ் சொசைட்டி’ (Thriving Families @ Children’s Society) என்ற புதிய நிலையத்தைச் சிட்டி ஸ்குவெர் கடைத்தொகுதியில் சங்கம் அறிமுகம் செய்யவிருக்கிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் அந்த நிலையம் சங்கத்தின் அடுத்த ஐந்தாண்டுக்கான புதிய திட்டத்தை உள்ளடக்கியிருக்கும்.

இதற்குமுன் இருந்த திட்டம் பெரும்பாலும் பிள்ளைகளுக்கும் இளையர்களுக்கும் கைகொடுப்பதை முதன்மையாகக் கொண்டிருந்தது என்ற சங்கத்தின் தலைமை நிர்வாகி ஆங் பூன் மின், பெற்றோருக்கு ஆதரவளிப்பதையும் புதிய திட்டத்தில் இணைத்துள்ளோம் என்றார்.

பல ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையிலும் மனத்தளவில் நன்றாக இருக்கும் பெற்றோரால் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் புதிய திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்றார் திரு ஆங்.

புதிய நிலையத்தில் உள்ள வளங்களைப் பெற்றோர் பயன்படுத்தி, பிள்ளை வளர்ப்பின் முக்கியத்துவம் போன்றவை குறித்து அறிந்துகொள்ள முடியும்.

அந்த நிலையத்தில் பெற்றோருக்குத் தேவையான தகவல்கள், எந்த இடத்தில் என்ன உதவி கிடைக்கும் போன்ற விவரங்கள், மனநலக் கற்றல் கூட்டங்கள் ஆகியவற்றையும் நிலையம் வழங்குகிறது.

13 வயதுக்குக் கீழ் உள்ள தொடக்கநிலை மாணவர்களில் பெரும்பாலோர், ஏற்கெனவே பிரச்சினையை எதிர்கொள்ளும் பெற்றோரிடம் தங்கள் பிரச்சினையைப் பகிர்ந்துகொள்ள தயங்குவதாகச் சங்கம் நடத்திய ஆய்வில் கண்டறிந்தது.

மேலும், இந்த ஆண்டு சிங்கப்பூர்ப் பெற்றோருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு கலந்துரையாடல்களில் கிட்டத்தட்ட 1,700க்கும் அதிகமான பெற்றோர் பங்கேற்றனர் என்று திரு ஆங் கூறினார்.

இத்தகைய ஆதரவு பெற்றோருக்கும் பூர்த்திசெய்யப்படாத தேவைகள் இருப்பதைக் காண்பிக்கிறது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்