தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஆயுதப் படையின் நம்பகத்தன்மை முதலீட்டாளர்களுக்குச் சிங்கப்பூர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: அமைச்சர் சான்

2 mins read
d65e2c55-f7be-400d-8623-07f36abbfc6a
‘லைட் மஷன் கன்’ ஆயுதம் குறித்து தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கிடம் விளக்கும் ராணுவ நிபுணர் முத்துக்குமரன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஆயுதப் படையின் நம்பகத்தன்மை முதலீட்டாளர்களுக்குச் சிங்கப்பூர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரைப் பாதுகாப்பான நாடாக வைத்திருக்கும் ஆற்றல் சிங்கப்பூர் ஆயுதப் படைக்கு இருப்பதாகவும் இதன் விளைவாக வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை சிங்கப்பூர் ஈர்க்கிறது என்றும் அமைச்சர் சான் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) கெப்பிட்டல் டவரில் நடைபெற்ற சிங்கப்பூர் ஆயுதப் படைத் தின மறு அர்ப்பணிப்புச் சடங்கில் அமைச்சர் சான் கலந்துகொண்டு பேசினார்.

“நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புடன் இருக்க தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் கடப்பாடு கொண்டுள்ளன. இன்றைய, நாளைய சவால்களில் மட்டும் கவனம் செலுத்தப்படவில்லை. புதிய சவால்கள் எழுந்தால் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் அடிக்கடி ஆராய்ந்து வருகின்றன,” என்றார் அமைச்சர் சான்.

நிகழ்ச்சியின்போது நடைபெற்ற கலந்துரையாடலுக்கு சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனமும் கெப்பிட்டாலேண்ட் இன்வெஸ்மென்ட்ஸ் நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்தன.

அதில் பேசிய அமைச்சர் சான், சிங்கப்பூர் பாதுகாப்பான நாடு என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி இருக்கிறது என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, விதிமுறைகள் திடீரென்று மாறிவிடாது என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உள்ளது என்றார் அவர்.

நாட்டின் பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மிரட்டல்களை எதிர்பார்த்து அவை ஏற்படுவதற்கு முன்பாகவே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோருக்கு இந்தப் பெருமை சேரும் என்று அமைச்சர் சான் கூறினார்.

உலக நாடுகளிடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், உலகளாவிய விதிமுறைகள், நெறிமுறை தேவை எனக் கருதும் புதிய பங்காளிகளுடன் சிங்கப்பூர் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அமைதிப் பூங்காவாக சிங்கப்பூர் தொடர்ந்தால் நாட்டுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார் அவர்.

இதற்கு சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் முக்கிய விவகாரங்களில் மக்களும் அரசாங்கமும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்