சிங்கப்பூர், அமெரிக்கா ஆகியவற்றின் கடற்படைகள் குவாமில் நடைபெற்ற 12 நாள் இருதரப்புப் பயிற்சிகளை ஜூன் 18ஆம் தேதி முடித்துக்கொண்டுள்ளன.
ஐந்தாவது முறையாக இடம்பெற்ற பசிபிக் கிரிஃபின் பயிற்சி இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கியதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
ஃபோர்மிடபல் கிளாஸ் ஃபிரிகேட் ஆர்எஸ்எஸ் சுப்ரிம் (Formidable-class frigate RSS Supreme) போர்க் கப்பல், எஸ்-70பி சீஹாக் (S-70B Seahawk) கடற்படை ஹெலிகாப்டர் ஆகியவற்றைக் கொண்டு சிங்கப்பூர்க் கடற்படை பயிற்சிகளை நடத்தியது.
இரண்டு கடல்துறை கண்காணிப்பு விமானங்கள், ஆறு எஃப்-16 போர் விமானங்கள் ஆகியவற்றை சிங்கப்பூர் ஆகாயப்படை பயிற்சியில் பயன்படுத்தியது.
இருநாட்டு கடற்படை முக்குளிப்பாளர்களும் பயிற்சிகளில் பங்கேற்றனர்.
பயிற்சியின்போது இருநாட்டுக் கடற்படைகளும் நவீன கடற்படை போருக்கான பயிற்சிகளை மேற்கொண்டன.
கடற்படைக்கும் ஆகாயப்படைக்கும் இருக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்த கடல், ஆகாயம் சார்ந்த பயிற்சிகளும் நடத்தப்பட்டன.
கடற்படை முக்குளிப்பாளர்கள் கடலில் உள்ள வெடிப்பொருள்களை அப்புறப்படுத்தும் பயிற்சிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான பயிற்சிகளிலும் களமிறங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
பசிபிக் கிரிஃபின் பயிற்சி இருதரப்பு கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதற்கான அருமையான வாய்ப்பு என்று சிங்கப்பூர்க் கடற்படையின் ஃபர்ஸ்ட் ஃபொளோடில்லாத் தளபதி கர்னல் டேனியல் இங் கோக் யெங் கூறினார்.
போர்க்காலத்துக்கான திறன்களை வளர்த்துக்கொள்ள குவாம் நீர்ப் பகுதியில் உள்ள பரந்த பயிற்சித் தளம் நல்ல வாய்ப்பளிக்கிறது என்றார் அவர்.
அமெரிக்காவின் கேப்டன் ஜான் பாகெட், வட்டாரத்தில் உள்ள பங்காளிகளுடன் உறுதியான கடப்பாடு உள்ளது என்றும் சிங்கப்பூருடன் 60 ஆண்டுகளுக்கும் அதிகமான பங்காளித்துவம் இருக்கிறது என்றும் கூறினார்.
சிங்கப்பூர்க் கடற்படைக்கும் அமெரிக்கக் கடற்படைக்கும் உள்ள வலுவான உறவையும் இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு தற்காப்பு உறவையும் பயிற்சி எடுத்துக்காட்டுகிறது என்று தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
இருதரப்புப் பயிற்சிகளைத் தவிர, நிபுணத்துவ பரிமாற்றங்கள், பலதரப்புப் பயிற்சிகள் ஆகியவையும் இடம்பெற்றன என்று அமைச்சு சுட்டியது.